புதன், ஜூன் 05, 2013

ஆசியாவில் அதிகரிக்கும் அணு ஆயுதங்கள்! : ரஷ்யா முதலிடம்!

உலக அளவில் அணுஆயுத இருப்பு பற்றிய புள்ளி விவரங்களை சிப்ரி (SIPRI) எனப்படும் ஸ்டாக்ஹாம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் அணு ஆயுதங்கள் குறைந்திருந்த போதும் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் அணுஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மிரட்டும் வடகொரியா உலகம் முழுவதும் 9 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இதில் வட கொரியா தவிர மற்ற 8 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2013-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ரஷ்யாவில் 8,500 அணு ஆயுதங்களும், அமெரிக்காவில் 7,700 அணு ஆயுதங்களும் பிரான்சில் 300 அணு ஆயுதங்களும், சீனாவில் 250 அணு ஆயுதங்களும் இருப்பதாக சிப்ரி (SIPRI) தெரிவித்துள்ளது.
இதேபோல், பிரிட்டனில் 225 அணுஆயுதங்களும், பாகிஸ்தானில் 100 முதல் 120 அணு ஆயுதங்களும், இந்தியாவில் 90 முதல் 110 அணு ஆயுதங்களும் இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்களும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் 17,270 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவானது என்றும் சிப்ரி கூறியுள்ளது. ஆனால், சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளதும் இந்தப் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இந்த மூன்று நாடுகளும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 அணு ஆயுதங்களை புதிதாக உருவாக்கியுள்ளன. எனினும், கடந்த ஆண்டு 10,000 அணுஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்த ரஷ்யா இந்த ஆண்டில் 1,500 அணுஆயுதங்களைக் குறைத்துள்ளது. இதே போல் அமெரிக்காவும் தன்னிடம் இருந்த அணுஆயுதங்களை சற்றுக் குறைந்துள்ளது.
ஆசியக் கண்டத்தைப் பொறுத்தவரை, அணு ஆயுதத்தை அதிகரித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இன்னமும் கையெழுத்திடவில்லை என்பதும், அணு ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் வட கொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளை அடிக்கடி அச்சுறுத்தி வருவதும் சிப்ரியின் அறிக்கையில் குறிப்பிடத் தக்க அம்சங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக