புதுடெல்லி: பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத எந்தவொரு சமூகத்தையும் நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். டெல்லியில் தேசிய பெண்கள் ஆணைய தலைமையகக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உயிரிழந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாக “நிர்பய பவன்’ என்ற பெயரில் இக்கட்டடம் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர் கிருஷ்ணா தீரத், தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் மம்தா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:”பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான செயல்கள், சட்டம்-ஒழுங்கு தொடர்பானது மட்டுமல்ல, சமூகத்தின் அக்கறையை பற்றியதும் கூட. வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் அருகே இருப்பவர்கள், அவர்களை காப்பாற்றாமல் பாராமுகமாக நடந்துகொள்கின்றனர்.
சமீப காலமாக நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களைப் பார்க்கும்போது, பண்பட்ட சமூகத்துக்கான அடையாளங்களை நாம் இழந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்காத, அவர்களை கண்ணியத்துடன் நடத்தாத சமூகத்தை நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது. பெரும்பாலான நேரங்களில் போதிய ஆதாரம் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்” என்றார் பிரணாப்.
Source : thoothuonline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக