புதன், ஜூன் 05, 2013

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக 5 பல்கலைக்கழகங்கள்!-மத்தியஅமைச்சர் ரஹ்மான் கான்!

புதுடெல்லி:சிறுபான்மையினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்களை தொடங்குவது என முடிவு செய்துள்ளோம். இப்பல்கலைக்கழகங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். சிறுபான்மை மதத்தினருக்கு கல்வி அளிப்பதற்காகத் தொடங்கப்படும் இப்பல்கலைக்கழகங்களில் மதம் தொடர்பாக கவனம் செலுத்தப்படமாட்டாது. கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்த சச்சார் குழு, சிறுபான்மையினரின் கல்வி நிலை, எஸ்.சி., எஸ்.டி.,யினரின் நிலையை விட பின்தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதனால்தான் இப்பல்கலைக்கழகங்களைத் தொடங்க முடிவு செய்தோம்” என்றார்.
தலித் சமூகத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வசதியாக பட்டியல் இனத்தில் சேர்ப்பது குறித்து ரஹ்மான் கான் கூறியதாவது: “”நியாயப்படி இக்கோரிக்கை சரியானதுதான். ஆனால், அரசியல் சாசன சட்டப்படி அவ்வாறு வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும். அரசியல் சாசனம் கூறுவதுதான் இறுதியானதாக இருக்கும்” என்றார்.அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில்வைத்துத்தான் இந்த 5 பல்கலைக்கழகங்களை தொடங்குகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “”நான் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வர முயன்றால், அதை அரசியல் ரீதியாக பார்க்கிறீர்கள்.
தேர்தல் வரும்வரை பணி எதையும் மேற்கொள்ளாமல் அமர்ந்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் ரஹ்மான் கான்.
Source : thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக