செவ்வாய், ஜூன் 18, 2013

விசாரணை முடிவடைந்த குண்டுவெடிப்புகளுக்கான பொறுப்பையும் இந்தியன் முஜாஹீன் ஏற்றது!-குலைல் நியூஸின் புலனாய்வு!

புதுடெல்லி: நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்குகளில் சிக்கவைப்பதற்கான உ.பி போலீசின் அவசரகதியான நடவடிக்கைகளில் ஏற்பட்ட அபத்தங்கள் ஏராளம். ஆஷிஷ் கேதானை எடிட்டராக கொண்டு இயங்கும் குலைல் நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ள இது தொடர்பான போலீஸ் விசாரணை அறிக்கைகள் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளன.


2008 ஆம் ஆண்டு இந்தியன் முஜாஹிதீன் என்ற மர்ம குழுவை கைதுச் செய்ததாக கூறிய இந்திய புலனாய்வு ஏஜன்சிகள், 2004-ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கான பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தன. ஆனால், ஏற்கனவே இவ்வழக்குகளில் விசாரணை முடிவடைந்துள்ளன. சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது விசித்திரமானது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புதான் வெடிக்குண்டுவெடிப்புகளுக்கு எல்லாம் காரணம் என்றால் அவ்வழக்குகளில் ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் ஆவர். 

ஆனால், தங்களுக்கு ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக, கைதுச்செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்வதற்கு புலனாய்வு அமைப்புகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை குலைல் நியூஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் தெளிவுப்படுத்துகின்றன. இதன் மூலம் ஏற்கனவே இவ்வழக்குகளில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்பதை தெரிந்துகொண்டே கைதுச் செய்யப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது.

இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று புலனாய்வு அமைப்புகள் கூறும் நபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களில் ஏற்கனவே விசாரணை முடிந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு என்ற தகவல்களை உ.பி போலீஸ் கண்டும் காணாததுபோல் நடிக்கிறது. விசாரணை தொடரும் வழக்குகளிலோ, இவர்களுடைய வாக்குமூலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நிரபராதிகள் என்று உறுதிச் செய்யப்படவர்களை விடுதலைச் செய்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர்.

2005-ஆம் ஆண்டு நடந்த சிரம்ஜீவி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாராணாசி கண்டோன்மெண்ட் ரெயில்வே ஸ்டேஷன் குண்டுவெடிப்பு, அதே ஆண்டு நடந்த சங்கட்மோசன் கோயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகள் உதாரணமாகும்.2008 செப்டம்பர் மாதம் டெல்லி, சூரத், அஹ்மதாபாத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து மும்பை போலீஸ் கைதுச் செய்த ஸாதிக் இஸ்ரார் ஷேக் என்பவர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய புள்ளி என்று போலீஸ் கூறியது.

2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை தவிர அதற்கு முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் தானும், தனது கூட்டாளிகளுமே காரணம் என்று  பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் பதிவுச்செய்த ஸாதிக் இஸ்ரார் ஷேக்கின் வாக்குமூலங்கள் கூறுகின்றன.அதுமட்டுமல்ல, வெடிக்குண்டை தயாரித்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து அவற்றை வைத்தது உள்ளிட்ட ஷேக்கின் வாக்குமூலங்களையும் போலீஸ் பதிவுச் செய்துள்ளது.

ஆனால், 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட அப்பாவிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் இவ்வழக்குகளில் இந்தியன் முஜாஹிதீனின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவோ, ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ போலீஸ் தயாராகவில்லை.மேலும் ஸாதிக் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளின் வாக்குமூலங்களில் இவ்வழக்குகளில் ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட ஒன்பது பேர் குறித்து எவ்வித தகவலும் இல்லை.அதேவேளையில் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு போன்ற குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படாத வழக்குகளில் இந்தியன் முஜாஹிதீனை குற்றவாளியாக போலீஸ் சேர்த்துள்ளது.

2007-ஆம் ஆண்டு உ.பி யில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்குகளின் நிலையும் இதுதான்.இவ்வழக்குகளில் இந்தியன் முஜாஹிதீன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் விசாரணை ஆவணங்கள் கூறும் வேளையில் எட்டு ஆண்டுகளாக சிறைகளி அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் தயாராகவில்லை என்று குலைல் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே குண்டுவெடிப்பை இரண்டு குழுக்கள் நடத்தியது என்று அறிவுக்கு பொருந்தாத வாதங்களை போலீஸ் ஆவணங்கள் கூறுகின்றன.

Source : thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக