கொழும்பு:இலங்கையில் முதன் முதலாக முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கான(உலமாக்கள்)பல்கலைக் கழகம் ஒன்று துவங்கப்படுவதற்கும்புத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா மன்னன் அப்துல்லாவின் பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகக் கல்லூரி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை ஹிரா பவுன்டேசன் நிறுவனத்தின் தலைவரான இலங்கை பொருளாதார வளர்ச்சித்துறை துணை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இளைஞர் வளர்ச்சி திறன் அமைச்சர் டலஸ் அழகபெரும் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பான நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜித் மற்றும் சவுதி அரேபியா முன்னணி முதலீட்டாளர் யஹ்யா அப்துல் அல் ராஷித் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
இலங்கையில் 20 அரசாங்க பல்கலைக்கழக கல்லூரிகளையும் 5 தனியார் பல்கலைக்கழக கல்லூரிகளையும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக ஹிரா ஸ்ரீலங்கா பவுன்டேசன் நிறுவனத்தின் தலைவரான துணை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார்.
தற்காலிகமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் காத்தான்குடி தொழில் நுட்பக் கல்லூரி கட்டிடத்தில் ஆரம்பமாகவிருக்கும் இப்பல்கலைக்கழக கல்லூரிக்கான நிரந்தரக் கட்டிடம் 1500 மில்லியன் ருபா நிதியில் ரிதிதென்ன என்னுமிடத்தில் சகல வசதிகளுடன் நான்கு வருடங்களுக்குள் கட்டி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அரபு மதரசாக்களில் மௌலவி பட்டத்துடன் உயர்தர தேர்வில் தேர்ச்சிப் பெற்ற உலமாக்கள் படவரைஞர், கட்டிடக் கலை, நிர்மாண மேற்பார்வை மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற தொழில்த்துறை கல்வியுடன் இஸ்லாமிய உயர் கல்வியும் கற்று டிப்ளோமா பட்டத்துடன் வெளியேறும் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மௌலவிமார்கள்(முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்) தொழில் வாய்ப்புகளைப் பெற வாய்ப்புகள் உண்டு. நாட்டில் ஏற்கனவே மௌலவிமார் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்றார் அமைச்சர்.
இவர்களுக்கு சிறந்த தொழில் வழிகாட்டலை ஏறப்படுத்தி இஸ்லாமிய உயர் கல்வியை வழங்கும் பொருட்டும் இப்பல்கலைக்கழகக் கல்லூரியை ஆரம்பிக்க சர்வதேச ரீதியில் முன்னணி இஸ்லாமிய பல்கலைக்கழகங்களுடனும் இணைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படுகின்றது. 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையகத்தின் அங்கீகாரத்துடன் முழுமையான பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை இது பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை சவுதி அரேபிய மன்னரின் பெயரில் முஸ்லிம்களுக்கு பல்கலைக்கழகக் கல்லூரியொன்று தனியாக ஆரம்பிக்கப்படுவதற்கு புத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேன தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதனை தாம் ஒரு போதும் அங்கீகரிக்கப்போவதில்லை என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக