ஞாயிறு, ஜூன் 09, 2013

பாஜக தேசிய செயற்குழு: அத்வானி புறக்கணிப்பு !

  • கோவாவில் நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி புறக்கணித்தார்.  குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவமும் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவியும் அளிக்கப்படுவதை எதிர்த்து அவர் இக்கூட்டத்தைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக மோடியைத் தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இனியும் தாமதப்படுத்தாமல் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

  • இந்நிலையில், எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த் சிங், உமா பாரதி, சத்ருகன் சின்ஹா போன்ற மூத்த தலைவர்கள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அத்வானி கலந்து கொள்ளாததற்கு உடல்நல பாதிப்புதான் காரணம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. எனினும், தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மோடியை முன்னிறுத்துவதில் கட்சியினரிடையே தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

  • செயற்குழுக் கூட்டம் போன்ற முக்கியமான விவாதக் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்ளாதது பா.ஜ.க.வின் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். அவர் கலந்து கொள்ளாததற்கு உள்ளர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கருதக் கூடாது என்றும் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மோடிக்கு தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவர் பதவியை அளிக்க அத்வானிக்கு நெருக்கமான சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் செயற்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக