வெள்ளி, ஜூன் 21, 2013

அமெரிக்க அறிவிப்பினால், ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் வெளியிட்டத் தகவலால், இன்று சர்வதேச அளவில் பல நாட்டு பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகளும் இன்று பெரும் சரிவு கண்டன.

பங்குச் சந்தைகள் பெரும் சரிவு:
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக, கடன் பத்திரங்களை அரசு வாங்கும் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது. அதைப் படிப்படியாக விலக்கிக் கொள்ளப் போவதாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால், அமெரிக்க பொருளாதாரம் குறித்த எதிர்மறை அச்சம் காரணமாக, சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. 
அதோடு, டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத அளவாக 60 ரூபாயைத் தொட்டதும், இந்திய பங்கு முதலீட்டாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பங்குகள் அவசர அவசரமாக விற்கப்பட்ட நிலையில், கடந்த பல மாதங்களுக்கு முந்தைய நிலைக்கு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. ரியல் எஸ்டேட், உலோகத் துறை பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. இன்றைய வீழ்ச்சி காரணமாக, பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என பங்கு வணிகத்துறை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக, இன்று வணிகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் சரிந்து, 18,719 ஆனது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி, 135 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 5,656-ல் நிறைவடைந்தது.
மறுபுறம், இன்று மாலை அன்னிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சியில் இருந்து சற்றே மீண்டு 59 ரூபாய் 70 காசாக உள்ளது. ஐரோப்பிய பொது நாணயமான யூரோ, 79 ரூபாய் 18 காசாக இருக்கிறது. இங்கிலந்து பவுண்டு ஸ்டெர்லிங், 92 ரூபாய் 21 காசாகவும், ஜப்பானின் 100 யென்னுக்கு நிகரான மதிப்பு 61 ரூபாய் 46 காசாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக