வெள்ளி, ஜூன் 07, 2013

யு.ஏ.பி.ஏ (UAPA) சட்டத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கம்!-எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு தீர்மானம்!

எஸ்.டி.பி.ஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநில செயற்குழு நேற்று  (06.06.2013) மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.  மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது வரவேற்றார், மாநில பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக். நிஜாம் முகைதீன், பி. அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இச்செயற்குழுவில் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

1. மத்திய அரசு கொண்டு வந்துள்ள UAPA (UNLAWFULL ACTIVITIES PREVENTION ACT) சட்டம் தடா, பொடா சட்டங்களுக்கு இணையானது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரானதாகும், இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழகம் முழுவதும் ஜுன் 9 முதல் 18 வரை இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் பிரச்சார இயக்கம் நடத்துவது என இச் செயற்குழு தீர்மானிக்கிறது. 

2. தனியார் பள்ளிகளுக்கு கட்டண விபரங்களை மாநில அரசு நியமித்த குழு உரிய முறையில் நிர்ணயித்த பிறகும், தனியார் பள்ளிகள் அவ்வுத்தரவை காற்றில் பறக்கவிட்டு மனம் போன போக்கில் பெற்றோர்களை கசக்கி பிழிகின்றன.இவ்விசயத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது தமிழக அரசு தயவு தாட்சண்யமின்றி கடுமையாக நடவடிக்கை எடுத்து பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை ஒதுக்க அரசு உறுதி செய்வதுடன் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது. 

3.தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அரசியல் கட்சிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை தனி தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களாய் நிறுத்துகின்றனர். சிறுபான்மை (இஸ்லாமிய) சமுதாய வேட்பாளர்களை பெயரளவிலேயே நிறுத்துகின்றனர். ஆனால் ராஜ்ய சபைக்கான வேட்பாளர்கள் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிக்கின்றனர். 

எனவே தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபை இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை (முஸ்லிம்கள்) யினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும் என முன்னணி அரசியல் கட்சிகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. 

4. சமீபத்திய முதல்வர்கள் மாநாட்டில் கட்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக வாழ்வாதார கோரிக்கையை தமிழக முதல்வர் எழுப்பியிருப்பதை இச்செயற்குழு வரவேற்கிறது.

மேலும் தென் தமிழக வளர்ச்சிக்கு இன்றியமையாத கோரிக்கையான சேது சமுத்திர திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் விபரங்களுக்கு ....

B.S.I.கனி
மாநில பொறுப்பாளர் 
செய்தி ஊடகத்துறை 
எஸ்.டி.பி.ஐ கட்சி-தமிழ்நாடு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக