திங்கள், ஜூன் 17, 2013

கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் குழந்தை உட்பட பல குற்றங்கள் 60.1 சதவீதம் தேசிய குற்ற ஆவண தகவல்!

கடந்த 2012ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக மட்டும் 38,172 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புதுடில்லியே  தலைமையிடமாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தனி அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2012ஆம் ஆண்டுக்கான குற்றப்பதிவு பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 2012ஆம் ஆண்டு இறுதி கணக்குப்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், வரதட்சிணைக் கொடுமை என 2 லட்சத்து 44,270 குற்றங்கள் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் 7,192 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குழந்தைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் 38,172 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் 1036 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 2.71 சதவீதம்.கொலை வழக்குகள்: இந்தியா முழுவதும் 34,434 கொலைகளும், தமிழகத்தில் 1,949 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. உத்தரப் பிரதேசம் - 4,966, பிகார் 3,566, மகாராஷ்டிரம் - 2,712, மத்தியப் பிரதேசம் - 2,373, மேற்கு வங்கம் - 2,252, கர்நாடகம் - 1860, குஜராத்தில் 1,126 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

கொலை முயற்சி என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் 35,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் பதிவானவை 2,954 வழக்குகள்.
திருட்டு, கொள்ளை: திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 65,055 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 18,467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிதி மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்கள் பிரிவில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 14,455 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4,790 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இணைய குற்றங்கள்: இணைய குற்றங்களைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் 3,477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 561 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

போலீஸாருக்கு எதிரான புகார்கள்: போலீஸாருக்கு எதிராக இந்தியா முழுவதும் 57,363 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 378 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,412 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.இந்தியா முழுவதும் ரூ.21,071.94 கோடி மதிப்புக்கு சொத்து திருட்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.1,417.93 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 6.7 சதவீதம் மட்டுமே ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை ரூ.137.44 கோடி வரை சொத்து திருட்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.82.58 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தத்தில் 60.1 சதவீதம் காட்டப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் இந்தியா முழுவதும் 2012ஆம் ஆண்டில் 60 லட்சத்து 41,559 வழக்குகள் பல்வேறு புகார்களின் அடிப்படையில் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7 லட்சத்து 49, 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக