இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவுகளில் ஆண்டுதோறும் வறட்சிக் காலத்தில் பனை எண்ணெய்க்காகப் பயிரிடுபவர்கள் நிலத்தை சுத்தம் செய்வதற்காக எரிப்பது வழக்கம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இச்செயலினை அரசு தடை செய்திருந்த போதிலும் சட்டத்துக்கு விரோதமாக இத்தகைய செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த ஆண்டும் அதுபோல் சுத்தம் செய்வதற்காக ஏற்படுத்திய தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம், அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் வாழ் மக்களை மிகவும் அச்சுறுத்தி வந்தன.
இந்நிலைமை அரசியல் மட்டத்தில் வார்த்தைப் போர்களாக வெடித்து ஒரு கட்டத்தில், இந்தோனேசியா அமைச்சர் ஒருவர், சிங்கப்பூர் அரசு குழந்தைத்தனமாக நடந்து கொள்கின்றது என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், காட்டுத் தீயினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக சிங்கப்பூர், மலேசியா அரசுகளிடம் இந்தோனேசியா ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோங்யோனோ மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இது தற்போதுள்ள நிலைமையை எளிதாக்கியிருக்கின்றதுடன் ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மூலம் தண்ணீரைப் பீச்சி அடித்தும், செயற்கை மழையை வரவழைத்தும் தீயை அணைக்க இந்தோனேசியா அரசும் முயற்சிக்கின்றது.
ஆயினும் பெரிய பலன் கிட்டவில்லை என்று அதிகாரிகள் கருதுகின்றனர். சுமத்திராவின் ரியாவ் மாகாணத்தில் இன்னும் கரும்புகை சூழ்ந்து கொண்டிருக்கின்றது.
மாகாணத் தலைநகர் பெகான்பருவிற்கு வந்த இரண்டு விமானங்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சிங்கப்பூரில் நிலைமை சீராகிக் கொண்டிருக்க தற்போது, மலேஷியாவின் வடக்கு நோக்கி புகை மண்டலம் நகர்ந்துள்ளது.
நேற்று, தலைநகர் கோலாலம்பூர் உட்பட பல நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்குமாறும், வெளியே முகக்கவசம் இல்லாமல் அனுப்பவேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக