புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் குண்டுவைத்ததாக போலீஸ் அநியாயமாக குற்றம் சாட்டிய ஷமீம் அஹ்மத் என்ற முஸ்லிம் இளைஞர் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற உ.பி அரசு முடிவுச் செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டு கொடோலியாவில் ஜமுனா ஃபதகில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ப்ரஷர் குக்கர் குண்டை ஷமீம் தான் வைத்தார் என்ற போலீஸின் கூற்றை உ.பி அரசு நிராகரித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி ஸங்கட் மோச்சன் மற்றும் வாரணாசி காண்ட் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. 21 பேர் கொல்லப்பட்ட இச்சம்பவங்களைத் தொடர்ந்து நடத்திய சோதனையில் ஜமுனா ஃபதக் அருகே ப்ரஷ்ஷர் குக்கர் வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் கூறுகிறது. ஹூஜி என்ற அமைப்புதான் இக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக போலீஸ் வாதிடுகிறது. பின்னர் இக்குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரி என்று குற்றம் சாட்டி அலஹாபாத் மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றிய கலீலுல்லாஹ்வை சிறப்பு படை கைதுச் செய்தது.
தேவ்பந்த் மதரஸாவில் கலீலுல்லாஹ்வுடன் பயின்ற 3 வங்காளதேசத்தவர்கள் இக்குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக போலீஸ் கூறுகிறது. கலீலுல்லாஹ் தற்போது தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 3 வங்காள தேசத்தவர்களைக் குறித்த தகவல் இல்லை. 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷமீம் அஹ்மதை இவ்வழக்கில் சேர்த்தனர். இவர் தலைமறைவாக உள்ளார். ஷமீம் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு அரசு, வாரணாசி மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் கோரியுள்ளது.
பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு கைதுச் செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்போம் என்று உ.பி மாநில சமாஜ்வாதிக் கட்சியின் அரசு அறிவித்தபோதிலும், போலீசும், பா.ஜ.கவும் இம்முடிவை எதிர்த்து வருகின்றனர். காலித் முஜாஹித் என்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர் விடுவிக்கப்படவிருந்த வேளையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு கொண்டு செல்லப்படும் வேளையில் போலீஸ் வேனில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. காலித்முஜாஹிதை போலீஸ் கொலைச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Source : thoothuonline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக