புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரக் கமிட்டி தலைவர் பதவி வழங்கப்பட்டதை கண்டித்துபா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எழுப்பிய சவால், அக்கட்சியை ஆட்டம் காணவைத்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் வெளியேறி புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடத்துவங்கியுள்ளது. இதனால் என்.டி.ஏ கலகலத்துப்போகும் என கருதப்படுகிறது. ஏற்கனவே மோடியுடன் மோதலை கடைப்பிடித்து வந்த ஐக்கிய ஜனதா தளம், 17 ஆண்டுகள் பா.ஜ.க உடனான உறவை முறிக்க முடிவுச் செய்துள்ளது. 20 மக்களவை உறுப்பினர்களை கொண்ட என்.டி.ஏவில் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு விலகியது பா.ஜ.கவின் கனவுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
16-ஆம் தேதிக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளம் தலைவரான சரத் யாதவ், கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். பா.ஜ.கவுடனான உறவை துண்டித்துவிட்டு 3-வது அணியை உருவாக்குவதுதான் நிதீஷ்குமாரின் திட்டம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மம்தா ஃபெடரல் முன்னணி என்ற பெயரில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
இதுதொடர்பாக, நிதீஷ் குமார் மற்றும் நவீன் பட்நாயக் ஆகியோருடன் மம்தா புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலாளர் கே.சி. தியாகி, மம்தாவை கொல்கத்தாவில் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் மம்தா செய்தியாளர்களிடம் கூறியது: மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணி அமைப்பது தொடர்பாக,கடந்த திங்கள்கிழமை ஃபேஸ்புக் இணையதளத்தில் மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சித் தலைவரும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி உள்ளிட்ட சிலர் என்னைச் சந்தித்துப் பேசினர். இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் புதன்கிழமை தொலைபேசியில் பேசினேன். “”நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பது நாட்டுக்கு மட்டுமல்லாது மாநில நலனுக்கும் நல்லது. பொதுமக்களின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என நிதீஷ் கூறினார்.
ஐக்கிய ஜனதா தள கட்சி பொதுச் செயலாளர் கே.சி. தியாகியும் புதன்கிழமை என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக்குடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் மூன்றாவது அணி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.
மூன்றவாது அணியை பலப்படுத்துவது தொடர்பாக, பல்வேறு மாநில கட்சித் தலைவர்களுடன் விரைவில் பேச உள்ளோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் எப்போது, எங்கே சந்தித்துப் பேசுவது என பின்னர் அறிவிக்கப்படும் என்றார் மம்தா. மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளது குறித்து நவீன் பட்நாயக்கிடம் தில்லியில் செய்தியாளர்கள் கேட்டபோது,
“”எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
மம்தாவுடனான சந்திப்பு குறித்து தியாகி கூறியது: மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவருடன்ஆலோசனை நடத்தினேன். எனினும், நாங்கள் இன்னமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும். அதன் பிறகு எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். எங்கள் கட்சியின் தலைவர்களான சரத் யாதவ் மற்றும் நிதீஷ் ஆகியோர் மம்தாவின் நீண்டகால நண்பர்கள் என்றார் தியாகி.
Source : thoothuonline.com
Source : thoothuonline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக