தமிழக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 4 பேர், திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். பதிவான வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாமல் போனது.
கடும் போட்டி நிலவிய 6 ஆவது இடத்திற்கு போட்டியிட்ட திமுக வேட்பாளரான கனிமொழிக்கு 31 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஏ. ஆர். இளங்கோவனுக்கு 22 வாக்குகளும் கிடைத்தன.
மொத்தம் பதிவான 231 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாமல் போனதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். கனிமொழிக்கு கிடைத்த கட்சிகளின் ஆதரவுப்படி அவருக்கு 32 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு 31 வாக்குகளே கிடைத்த போதிலும், 9 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட இரா.லட்சுமணன், கே.ஆர்.அர்ஜூணன், டாக்டர் வா.மைத்ரேயன், த.ரத்தினவேல் ஆகிய 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.ராஜாவும் வெற்றி பெற்றனர்.
தே.மு.தி.க. வேட்பாளர் ஏ. ஆர். இளங்கோவன் 22 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
முன்னதாக காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்பட தேர்தலில் பங்கேற்ற அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
3 உறுப்பினர்களை கொண்ட பாமக தேர்தலை புறக்கணித்த நிலையில், மீதமுள்ள 231 சட்டசபை உறுப்பினர்களுக்கான வாக்குகள் பதிவானது. இரண்டே கால் மணி நேரத்தில் அனைத்து வாக்குகளும் பதிவாகிவிட்டன.
அ.தி.மு.க சார்பில் செம்மலை எம்.பி.யும், தி.மு.க சார்பில் கம்பன் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ.வும், தே.மு.தி.க சார்பில் வெங்கடேஷ் எம்.எல்.ஏ.வும், புதிய தமிழகம் சார்பில் பாஸ்கர் மதுரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஜி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பாக்கியம், பார்வர்டு பிளாக் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி் சார்பில் சம்சூதீன் ஆகியோர் தேர்தல் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலருமான ஜமாலுதீன் முன்னிலையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
மாநிலங்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாலை 5 மணிக்கு தொடங்கி, பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக