செவ்வாய், ஜூன் 18, 2013

பா.ஜ.கவின் கனவு நிறைவேறாது!- உமர் அப்துல்லாஹ்!

ஸ்ரீநகர்:பா.ஜ.க. ஒவ்வொரு கூட்டணி கட்சியாக இழந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக அமர வேண்டும் என பா.ஜ.க.வின் கனவு நிறைவேறாது என காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகியது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் கூறியதாவது:ஐக்கிய ஜனதாதளம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி விட்டது. நரேந்திர மோடியை முன்னிறுத்துவதால் சில கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்து வெளியேறும் எனக்கூறப்பட்ட நிலையில் ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி உள்ளது.

பா.ஜ.க.வுக்கு தேவையான தொகுதிகளை நரேந்திர மோடியால் பெற்றுத் தர முடியுமா? பா.ஜ.க. ஒவ்வொரு கூட்டணி கட்சியாக இழந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக அமர வேண்டும் என பா.ஜ.க.வின் கனவு நிறைவேறாது. அடல் பிகார் வாஜ்பேயி தலைமை தாங்கியதால் தான் தேசிய மாநாட்டுக் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்தது.
ஒடிசா முதல்வர், மேற்கு வங்க முதல்வர் ஆகியோர் முன்பு பா.ஜ.க. கூட்டணியில் இருந்தவர்கள் தான். ஆனால் பா.ஜ.க. யாரை முன்னிலை படுத்துகிறதோ அவரை அக்கட்சிகள் ஏற்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஐக்கிய ஜனதாதளம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும். ஐக்கிய ஜனதாதளம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். நிதீஷ்குமார் இணைந்தால் எங்கள் கூட்டணி பலம் பெறும். மூன்றாவது அணி எப்போதும் உருவாகாது. தேர்தலுக்கு பின்னரே மூன்றாவது அணி ஏற்படும். மூன்றாவது அணி குறித்து அறிவிப்பு வெளியானவுடனே தலைவர் குறித்த சர்ச்சை எழுந்து விடும். ஒவ்வொருவரும் தன்னைத் தானே பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொள்வர் என்றார் ஒமர் அப்துல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக