பல்கேரிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்ட நிலையில், அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். Movement for Rights and Freedoms கட்சித் தலைவரான அகமது டோகனுக்கு கிடைத்த ஓரிரு விநாடிகளை திறமையாக பயன்படுத்தி, தன்னை சுட வந்த நபரை தள்ளி விட்டார். ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் அரசியல் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் அகமது டோகன்
மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர், பார்வையாளர் இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்கு அவசரமாக சென்றார். சுமார் 25 ஆண்டுகளாக கட்சித் தலைவராக உள்ள 58 வயதான அகமது மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, பார்வையாளர் பகுதியில் இருந்து எழுந்து மேடைக்கு சென்ற வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, தலைக்கு நேரே நீட்டினார். முதலாவது சூடு மிஸ்-ஃபயர் ஆனது. தோட்டா அகமது மீது படவில்லை.
அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் ஓரு கணம் நின்றிருந்த அகமது, மறு கணமே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார். உடனே துப்பாக்கியால் சுட முயன்ற நபரை பிடித்து தள்ளினார்.
இதையடுத்து, இரண்டாவது தடவை சுடுவதற்கு துப்பாக்கி நபருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது. முதல் தடவை சரியாக சுடப்பட்டிருந்தால், அகமது மரணம் அடைந்திருப்பார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேடையில் நடைபெற்ற இந்த அதிர வைக்கும் சம்பவத்தை பார்த்து அருகில் இருந்த பாதுகாவலர்கள், கட்சி நிர்வாகிகள் ஓடி சென்று அந்த வாலிபரை மடக்கினர். உடனடியாக அவரை கீழே தரையில் சாய்த்தனர்.
அப்போது அவரிடம் இருந்த துப்பாக்கியும் தரையில் வீழ்ந்தது. துப்பாக்கி லோட் பண்ணப்பட்டிருந்தது என்று பின்னர் தெரியவந்தது. முதல் தடவை சரியாக சுடாமல் போனதன் காரணம், இந்த நபர் துப்பாக்கியை இயக்க தெரிந்த நபர் அல்ல என்பதுதான் என பின்னர் போலீஸார் தெரிவித்தனர்.
தரையில் வீழ்த்தப்பட்ட நபரை பாதுகாவலர்களும், கட்சி நிர்வாகிகளும் சரமாரியாக அடித்து உதைத்தனர். சுட வந்த நபர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் டி.வி. கேமராக்களிலும் பதிவாகியது. மற்றொரு குழுவினர் உடனே வந்து அகமதுவை சுற்றி மனிதக் கவசம் அமைத்துக் கொண்டனர்.
துப்பாக்கியால் சுடுவதற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு அழைத்து சென்றனர். சுமார் 3,000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் எப்படி அவர் சோதனைகளை தாண்டி துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் என்று தெரியவில்லை. விசாரணையில் அவர் கருங்கடல் பகுதியில் உள்ள நகரான பர்கஸை சேர்ந்த ஒக்டாய் எனிமீமெதவ் என்று தெரிய வந்துள்ளது.
அவரிடம் இருந்த 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர் மீது ஏற்கனவே போதை கடத்தல் வழக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. எதற்காக அகமதுவை கொல்ல வந்தார் என்று விசாரணை நடக்கிறது. 1996-ம் ஆண்டு, பல்கேரிய முன்னாள் பிரதமர் ஆன்ட்ரே லுக்கானோவ், சோஃபியா நகரில் அவரது வீட்டுக்கு வெளியே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பிறகு, அரசியல்வாதி ஒருவர் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டது, இப்போதுதான்.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக