திங்கள், ஜனவரி 21, 2013

காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களுமே இனி என் வாழ்க்கை: ஜெய்ப்பூரில் ராகுல் காந்தி பேச்சு !

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களும்தான் இனி தமது வாழ்க்கை என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ராகுல்காந்தி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: எனக்கு ஆதரவு தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி என்பது எனக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய கெளவரம். கடந்த 8 ஆண்டுகாலத்தில் கட்சி எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது ஆயுதங்களால் அல்ல... மக்களின் ஆயுதமற்ற அகிம்சைவழிப் போராட்டத்தால்தான்! காங்கிரஸ் கட்சியும் அகிம்சை போராட்டத்தின் மூலமாக பிரிட்டிஷாரை வீட்டுக்கு அனுப்புவோம் என்று முழக்கமிட்டது. மகாத்மா காந்திக்குப் பின் ஜனநாயகத்தை அரசியல் சாசனத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மதங்களுக்கு அப்பால்..சாதிகளுக்கு அப்பால் காங்கிரசை ஆதரிக்கின்றனர். விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக பசுமைப் புரட்சி வந்தது. அதேபோல் மக்களது வாழ்வில் விடியலைத் தர தகவல் தொழில்நுட்ப புரட்சி வந்தது. மக்கள் தங்களுக்கான உரிமைகளை அனுபவித்து வருகின்றனர். ஏழை மக்களின் நலன்களைப் பற்றி கதவை மூடிய அறைகளுக்குள் நாம் விவாதிக்கிறோம். மக்களுக்கான நலத்திட்டங்கள் மக்களிடம் சேரவேண்டும் என்பதுதான் மானியங்களை நேரடியாக வழங்குவது போன்றவை. ஆனால் எதிர்க்கட்சிகளோ மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் எனக்கு மிகப் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல.. ஒரு குடும்பம். உலகின் மிகப் பெரிய குடும்பம் காங்கிரஸ் கட்சி. நமது குடும்பத்தால் மாற்றங்களை உருவாக்கிவிட முடியும். உங்கள் அனைவரது கருத்துகளையும் மதித்து நடப்பேன். இந்த கட்சி மகாத்மா காந்தியினுடையது. 

அழுத சோனியா
நேற்று இரவு எனக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். என்னுடைய அறைக்கு அம்மா வந்தார். ஆனால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்குத் தெரியும்.. அதிகாரம் என்பது எப்படிப்பட்டது என்பதை அவர் உணர்ந்தவர். அதனால்தான் அவர் அதிகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்தார். இன்று முதல் காங்கிரஸ் கட்சி, இந்திய மக்கள்தான் என்னுடைய வாழ்க்கை. நமது கட்சியில் தேர்தலில் போட்டியிடுவோர் குறித்து வட்டார் அளவில் கட்சித் தொண்டர்களிடம் நாம் விவாதிப்பது இல்லை. பிற கட்சிகளில் இருந்து நம்மோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின் மீண்டும் பழைய கட்சிக்கே போய்விடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் மதிப்புக்குரிய சொத்து என்பதை கட்சி கவனத்தில் கொண்டு செயல்படும் என்றார் அவர்
1



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக