அகில இந்திய அளவில் நடந்த சி.ஏ., தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா ஜெயக்குமார் முதலிடம் பிடித்துள்ளார். மும்பை புறநகர்ப்பகுதியான மலாட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் பெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள், பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் குடியேறியவர். தற்போது மும்பையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மகள் பிரேமா ஜெயக்குமார். 24 வயதான பிரேமா, கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த
அகில இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் தேர்வில், இந்தியாவிலேயே முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார். மொத்த மதிப்பெண்களான 800க்கு 607மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் பிரேமா. மலாட் பகுதியில் ஒரு அறை கொண்ட வசதி குறைவான வீட்டில் தற்போது வசிக்கிறது ஜெயக்குமார் குடும்பம்.
இந்நிலையில், தனது வெற்றி குறித்து பிரேமா கூறுகையில், “இது தன் வாழ்வில் மிக முக்கியமான சாதனை. என்னைப் பொறுத்தவரையில் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம். எனது தந்தை மற்றும் தாயின் ஆசியும், உதவியும் இல்லாவிட்டால் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியாது.
எனது பெற்றோர் என்னை ஊக்குவித்தனர். இப்போது எனது பெற்றோரை மிகவும் வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். எனது படிப்புக்கு பணம் ஒரு தடையாக வருவதை எனது தந்தையும், குடும்பத்தலைவியான எனது தாயும், எனது சகோதரனும் ஒருபோதும் அனுமதித்ததில்லை” என்று தெரிவித்துள்ளார். பிரேமாவின் சகோதரரும் தற்போது சி.ஏ., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக