"தேர்தலுக்குப் பின்பு தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படும்" என நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக தலைவர் இல. கணேசன் கூறினார்.
பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
"திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி கருத்து தெரிவித்து வருகிறார். ஆணையத்தின் கெடுபிடிகளைச் சாடுகிறார். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் காரணமாக அப்பாவி மக்கள், வணிகர்கள் பாதிக்கப்படுவது உண்மையாக இருக்கலாம்.
இந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் கெடுபிடிகளுடன் இருக்க அவசியம் ஏற்பட்டது எதனால்?
இலவசங்கள் வழங்குவதன் மூலம் பாரத நாட்டில் சுயமரியாதை இழந்த மாநிலம் தமிழகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பொருட்கள் வாங்கும் சக்தியையும், பொருளாதர நிலையையும் தான் மேம்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதை ஏற்றுக்கொள்ளலாம்.
இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். இது தேர்தல் விதிமுறையை மீறியது ஆகாதா? தமிழகத்தில் அரசியல் சூழல் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. மே 13ந்தேதிக்குப் பிறகு திமுக, அதிமுகவுடனோ, கம்யூனிஸ்ட் காங்கிரசுடனோ கை கோர்க்காமல் வேறு கட்சிகள் யார்? யாருக்கு வேண்டுமானாலும் உதவ முன்வரலாம். காட்சிகள் மாறலாம். கம்யூனிஸ்ட் திமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம்.
காங்கிரஸ் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம். மே 13க்குப் பிறகு பீகார் மாநிலம் சந்திக்கும் குதிரை பேரங்கள் இங்கு நடக்கும். கொள்கை ரீதியாக உறுதியாக இருக்கும் பா.ஜனதா இந்தத் தேர்தலில் 6 சட்டமன்ற உறுப்பினர்களை குமரியில் இருந்து அனுப்பும். தமிழகத்தைக் குஜராத் போல் மாற்ற வேண்டும். பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து சுஷ்மா சுவராஜ், அகில இந்திய தலைவர் நிதின்கட்கரி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் தமிழகத்திற்குப் பிரச்சாரம் செய்ய வருகை தரவுள்ளனர்."
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக