திங்கள், ஏப்ரல் 08, 2013

பிஎஸ்பி தலைவர் கொலை வழக்கு : சாமியார் படம் டெல்லி போலீஸ் வெளியீடு !

  • டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் தீபக் பரத்வாஜ் கொலை வழக்கில், சாமியார் ஒருவரின் படத்தை டெல்லி போலீசார் நேற்று மாலை வெளியிட்டனர். கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தெற்கு டெல்லியில் போட்டியிட்டவர் பரத்வாஜ். காங்கிரஸ் வேட்பாளர் மக்பால் மிஸ்ரா என்பவரை எதிர்த்து போட்டியிட்டார். கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், ஓட்டல் என பல்வேறு தொழில்கள் செய்து வந்தார் பரத்வாஜ். வேட்பு மனு தாக்கல் செய்த போது, தனது சொத்து மதிப்பு ரூ.600 கோடி என பரத்வாஜ் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தெற்கு டெல்லியின் ராஜோக்ரி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பரத்வாஜை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் புருஷோத்தம் ராணா, சுனில் மான் ஆகிய 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சாமியார் ஒருவரின் தூண்டுதலின்படி பரத்வாஜை சுட்டுக் கொன்றோம் என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் பீத் பகுதியை சேர்ந்த மச்சேந்திரநாத் (எ) பிரதிபா ஆனந்த் (48) என்ற சாமியாரின் புகைப்படத்தை டெல்லி போலீசார் நேற்று மாலை வெளியிட்டனர். பரத்வாஜை கொலை செய்வதற்கு இவர்தான் பணம் கொடுத்து ஆட்களை அனுப்பியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக