பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட இவர்கள் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட புகாரி மீது கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் இந்த வழக்குகள் அனைத்திலிருந்தும் புகாரி நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக புகாரி உள்ளிட்ட இளைஞர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குமரி பாஜக தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்திலும் பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரின் இத்தகைய செயலை கண்டித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இன்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ்டிபிஐ கட்சி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், மமமுக, பாப்புலர் பிரண்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. மேலும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக