ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு! கைதானவர்கள் நிரபராதிகள்! - செய்தியாளர்கள் சந்திப்பில் உறவினர்கள் !

  • பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நெல்லையைச் சேர்ந்த மூன்று பேரும் நிரபராதிகள் என்று அவர்களுடைய உறவினர்கள் பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

  • பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தமிழகத்தைச் சார்ந்த கிச்சான் புகாரி, பீர் மொய்தீன், பஷீர் ஆகியோரை பெங்களூர் போலீஸ், தமிழக போலீசின் உதவியுடன் கைது செய்துள்ளது. குண்டுவெடிப்பிற்கு தொடர்பில்லாத அப்பாவிகள் இவர்கள் என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மூன்று பேரின் உறவினர்களும் பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

  • செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறும்போது; “கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட புகாரி, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தி வரும் சட்டரீதியான போராட்டங்களை சீர்குலைக்கவே தமிழ போலீஸை பயன்படுத்தி கர்நாடகா போலீஸ் மூன்று பேரையும் கைது செய்துள்ளது.

  • சென்னை நீதிமன்றத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்று வரும் வேளையில் இவர்களை திருநெல்வேலியில் வைத்து போலீஸ் கைது செய்தது. புகாரியும், அவரது தம்பி சதாம் ஹுஸைனும் முன்னர் சில வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தாலும் பெங்களூர் குண்டுவெடிப்பில் இவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

  • குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஏப்ரல் 18-ஆம் தேதி புகாரி சென்னையில் இருந்தார். 19-ஆம் தேதி கோவையில் இருந்தார். அவரது தம்பி சதாம் ஹுஸைன், வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை சந்திக்க கோவை சென்றிருந்தார். ஏப்ரல் 21-ஆம் தேதி புகாரி திருநெல்வேலி நீதிமன்றத்திலும், சில வழக்குகள் தொடர்பாக சென்றிருந்தார். அதற்கு பிறகு திருநெல்வேலிக்கு திரும்பிய பிறகு 22-ஆம் தேதி நண்பர்களான சுலைமான், ஸாலி ஆகியோரை போலீஸ் பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்தது. சுலைமானை பின்னர் போலீஸ் விடுவித்தது. ஸாலியை இன்னொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

  • புகாரிக்காக உறவினர்கள் ஆள்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது கர்நாடகா போலீஸ் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. ஹேபியஸ் கார்பஸ் மனுவில் அரசு, நீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது. தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக முயன்றதே புகாரியை பொய் வழக்கில் சிக்கவைக்க காரணமாகும்.

  • பஷீர் ரியல் எஸ்டேட் ப்ரோக்கராகவும், பீர் மொய்தீன் திருநெல்வேலியில் டீக்கடையும் நடத்தி வருகிறார். நிரபராதிகளான இவர்களை விடுதலைச் செய்யவேண்டும்.” இவ்வாறு உறவினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

  • செய்தியாளர்கள் சந்திப்பில் புகாரியின் தாயார் கவ்லத், பஷீரின் மனைவி ஷம்சுன்னிஸா, பீர் மொய்தீனின் மனைவி செய்யதலி ஃபாத்திமா, அசோசியேசன் ஃபார் ப்ரொடக்ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸ் கர்நாடகா கன்வீனர் இர்ஷாத் அஹ்மத் தேசாய், எஸ்.எ.ஹெச் ரிஸ்வி ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக