புதன், ஏப்ரல் 24, 2013

இந்திய வான்வெளியில் பறந்ததா சீன ஹெலிகாப்டர்? எல்லையில் பரபரப்பு!

இந்திய நிலப்பரப்புக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவி முகாம் அமைத்துள்ளதாக வந்த செய்தி அடங்குவதற்குள், இந்திய வான்வெளியில் சீன ஹெலிகாப்டர்களும் பறந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப் படையினர் அங்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி ஊடுருவி, கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, “இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
அதன்படி எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங், ஜம்மு காஷ்மீரில் தனது இரண்டு நாள் பயணத்தை தொடங்கி உள்ளார். அத்துடன் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையேயான இரண்டாவது கொடி சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சீன படையினரின் அத்துமீறிய ஊடுருவலுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே லடாக் பிரதேசத்துக்குள் சீன படையினர் ஊடுருவிய அதே தினத்தன்று, அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதியன்று சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளிக்குள் பறந்து வந்து, பின்னர் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், டெல்லியில் உள்ள சீன தூதரக அதிகாரி இதனை மறுத்துள்ளார். “எங்களது வெளியுறவு துறை அமைச்சகம் கூறியவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சீன படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொந்தளிப்பை உண்டாக்கக் கூடியதாக இருந்து வருகின்றது. இந்த எல்லை சர்ச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இருநாட்டு அரசுகளும் நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : நியூ இந்திய 
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக