பிரதமர் வேட்பாளர் குறித்த எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.கவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு பிரதமர் பதவிக்கான வேட்பாளரை இந்த ஆண்டு இறுதிக்குள் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.
துவக்கம் முதலே மோடிக்கு எதிராக மதசார்பற்ற பிரதமர் வேட்பாளர் கருத்தை முன்வைத்து வருகிறது ஐக்கிய ஜனதா தளம் கட்சி. இந்நிலையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு டெல்லியில் நடைபெற்றது.
அப்போது பேசிய அக்கட்சியின் முக்கிய தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதீஷ்குமார்; “தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் நீடிக்கிறது; எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் வேறு விதமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். சமுதாயத்தில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்துச் செல்லக்கூடியவரே பிரதமராக முடியும். அந்த நிலை தற்போது மாற்றப்பட்டு வருகிறது. இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
போற்றக்கூடிய தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திகழ்ந்தார். அவரது தலைமையில் அதிகமான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தன. கூட்டணி கட்சிகளுக்கு அவர் மரியாதை அளித்தார். அவரைப் போன்றவர் மீண்டும் பிரதமர் வேட்பாளராக வருவதை எங்கள் கட்சி உறுதி செய்யும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் வேறு விதமான முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும். பதவியில் நீடிப்பதற்காக, மதச்சார்பற்ற தன்மையில் இருந்து எங்கள் கட்சி சமரசம் செய்து கொள்ளாது. பிரதமர் பதவிக்கு நான் போட்டியிட விரும்பவில்லை. குறைவான தொகுதியில் போட்டியிட்டு, அதன் மூலம் மத்தியில் எங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்று நிதீஷ்குமார் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அகில இந்திய தலைவர் சரத்யாதவ், “17 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. இந்தக் கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறோம்'' என்றார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு தீர்மானத்தில் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க நிதீஷ் குமார், சரத் யாதவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக