செவ்வாய், ஏப்ரல் 16, 2013

ஒரு ஏழை பெண்ணின் கண்ணீர் கதை!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஏழை பெண் 27 வயதான லட்சுமி மற்றும் அவரது கணவர் சாமுவேல். இந்த ஏழை தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் வசந்த மாளிகையோ சேலம் பழைய பேருந்து நிலையத்தின் பிளாட் பாரம்தான்.  

இவர் குழந்தை உண்டாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீர் என பிரசவ வலியால் துடித்திருக்கிறார். இதை பார்த்த பண்ணாரி என்கிற ஏழை  பெண்மணி இவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் கால் மைல் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வாகனம் பிடிக்க கூட அவர்களிடம் பணம் இல்லை. இதனால் லட்சுமியை பிரசவ வலியோடு கால் மைல் தூரம் உள்ள மருத்துவமனையை அடைய  இரண்டு மணி நேரம் நடந்து சென்றுள்ளனர். 


இதில் மேலும் கொடுமை என்னவென்றால் அரசு மருத்துவ மனையில் லட்சுமியை சேர்த்து கொண்ட நர்ஸ் பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் ஆயிரம் ருபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பிளாட் பாரத்தில் தங்கி இருக்கும் ஏழைகள் ஆயிரம் ரூபாய்க்கு எங்கே போவார்கள்? 


இந்த பணத்தை கொடுக்க முடியாததால் மருத்துவமனையில் இருந்து வெளியாக்கப்பட்டுள்ளார். இதனால் லட்சுமியை திரும்பவும் அவர்கள் தங்கி இருந்த பிளேட்பாரத்துக்கே அழைத்து வந்துள்ளார்கள். இந்நிலையில் இவருக்கு மீண்டும் வலி வந்ததால் பண்ணாரி அம்மாவே இவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். அந்த நேரம் பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களும் உதவி செய்துள்ளனர். 

இதை எல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்களோடு மக்களாக ஒன்றி மக்கள் குறைகளை தன் குறையாக கருதிய மறைந்த வெனிசுலாவின் அதிபர் சாவேஸ் உடைய நினைவவலைகள்தான் ஏற்படுகிறது. ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவர்  செலுத்திய   உண்மையான அக்கறையை அவரது எதிரிகள் கூட மறுத்ததில்லை. 

1998-ஆம் ஆண்டு நடந்த வெனிசுலா அதிபர் தேர்தலில் சாவேஸ் வெற்றி பெற்றார். 2005யில் நாட்டின் நூறு விழுக்காடு கல்வியறிவு என்கிற நிலை கொண்டு கொண்டு வந்தார். நாட்டு மக்களுக்கு உணவு உத்திரவாதம் செய்யப்பட்டது. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டது. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் என்கிற வேகத்தில் வீடுகள்  கட்டப்படுகிறது. 

தமிழக முன்னாள், இந்நாள் முதல்வர்கள் எல்லாம் இதுபோன்று நூற்றுக்கணக்கான செய்திகளை தினமும் பத்திரிக்கைகளில் படிப்பார்கள். ஆனால் அதை பற்றியெல்லாம் பேசவோ, நடவடிக்கை எடுக்கவோ அவர்களுக்கு நேரமும், தேவையும் இருந்ததில்லை. பெரிய மக்கள் போராட்டங்களையே கண்டு கொள்வதில்லை, இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்.

சம காலத்தில் வெனிசுலா அதிபர் சாவேஸ் போன்ற சில தலைவர்கள் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள். இந்த ஏழை லட்சுமி மாதிரி வீடு வசதி , மருத்துவ வசதி, கல்வி வசதி, ஒருவேளை உணவுக்கு கூட வழி  இன்றி தவிக்கும் கோடான கோடி மக்களை கொண்டதுதான் நமது இந்திய திருநாடு. இந்த நாட்டில் டாட்டாவும், பிர்லாவும், மிட்டலும், ரிலைன்ஸ் போன்ற முதாளிகளும், அரசியல்வாதிகளுமே வாழ்கின்றனர். 
நன்றி : சிந்திக்கவும் 
 *ஏழைகள் வாழ வழியற்ற நாடு இந்தியா*



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக