விருதுநகர்: சிவகாசி பட்டாசு விபத்தில் பலியானவர்களில் 31 பேர் வேடிக்கை பார்க்க சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விபத்து பல கட்டங்களில் நடைபெற்று, பலர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 31 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சிவகாசி அருகே விபத்து நடந்த ஓம்சக்தி பட்டாசு ஆலையில் மொத்தம் 45 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்கும் இடையே இடைவெளியுடன் தனித்தனியாக அமைந்துள்ளன. இங்கு சுமார் 300 பேர் வேலை பார்க்கிறார்கள். இதில் பாதி பேர் வடமாநிலத்தவரும், மற்றவர்கள்
சிவகாசியை அடுத்த திருத்தங்கலை சேர்ந்தவர்கள்.
இதில் வடமாநிலத்தவர்கள் ஆலையின் அருகிலேயே தங்கி உள்ளனர். மற்றவர்கள் வேனில் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
விபத்தின் துவக்கம்:
நேற்று பகல் 12 மணி அளவில் முதலில் ராக்கெட் வெடிகள் வெடித்துள்ளது. உராய்வு அல்லது அதிக வெப்பம் காரணமாக இவை வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பட்டாசு வெடிக்க ஆரம்பித்த போதே, அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் ஆலையில் இருந்து வெளியே ஓடி வந்துவிட்டனர்.
ராக்கெட் வெடிகள் சிதறி பக்கத்தில் இருந்து குடோனில் போய் விழுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மேகசின் என்ற வெடிமருத்து வெடிக்க ஆரம்பித்தது. இதில் 2 பேர் பலியாகினர். வெடி சத்தம் தொடர்ந்து கேட்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்க்க அங்கு திரண்டனர். இதில் சிலர் இறந்தவர்களின் உடல்களை வெளியே தூக்கி வந்தனர்.
அப்பகுதியில் இருந்த குவாரியின் மீது ஏறி நின்ற மக்கள் வேடிக்கை பார்த்தனர். அப்போது ஆலையின் வளாகத்தில் காய வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள், மேகசின் குடோனில் வெடித்த தீப்பொறிகள் பட்டு வெடித்தன. அதன்பிறகு ஆலையின் நுழைவு வாயில் உள்ள ஸ்டாக் ரூமுக்கும் தீ பரவியது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆலை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
வெடிவிபத்து காரணமாக ஆலையின் கட்டிட கற்கள் நாலாபுறமும் சிதறின. இதில் குவாரியின் மீது நின்று வேடிக்கை பார்த்த 31 பேர் பலியாகினர்.
31 உடல்கள் அடையாளம் தெரிந்தது:
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களில் 31 பேர் உடல்கள் அடையாளம் தெரிய வந்துள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்களில் 20 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்கள் பெயர் வருமாறு:
1.தாளமுத்து (25) திருத்தங்கல், கண்ணகி காலனியை சேர்ந்த ராமசாமி மகன்.
2.ஆதிலட்சுமி (30), விநாயகர் காலனி இருளப்பன் மகள்.
3.மடப்புரத்தான் என்ற பாலமுருகன் (19), சிவகாசி புதுத்தெரு கோட்டை மலையான் மகன்.
4.முருகன் (39), திருத்தங்கல் கே.கே.நகர் ஆத்தியப்பன் மகன்.
5.செல்வம் (32), சிவகாமிபுரம் காலனி மாரியப்பன் மகன்.
6.சுப்பிரமணி (42), செல்லையா நாயக்கன்பட்டி.
7.சுப்பையா கனி (45), சின்னராமலிங்கபுரம்
8.ராஜு (30), நாரணாபுரம், சக்கப்பன் மகன்.
9. தங்கவேல் (40) கோவிந்த நல்லூர்.
10.மாரிமுத்து (26), ஜமீன்சல்வார்பட்டி, கடற்கரை மகன்.
11.பொன்ராஜ் (18), செல்லையா நாயக்கன்பட்டி சுந்தர்ராஜ் மகன்.
12.கந்தசாமி (43) சின்ன ராமலிங்கபுரம்.
13.சந்திரமோகன் (20), சிவகாசி பிச்சாண்டி தெரு, ராமச்சந்திரன் மகன்.
14.பைடன் (20), செல்லையா நாயக்கன்பட்டி குருசாமி மகன்.
15.இன்பசேகரன் (40), தேராபட்டி.
16.வெங்கடாஜலபதி (40), திருத்தங்கல்.
17.அந்தோணிராஜ் (41), தேவர்குளம்.
18.முத்துமாணிக்கம் (35),
19.பாலு (32), முதலிபட்டி ரவிச்சந்திரன் மகன்.
20.கணேசன் (40), போஸ் காலனி, சிவகாசி.
படுகாயமடைந்தவர்களில் 9 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் செல்லையாநாயக்கன்பட்டியை சேர்ந்த மணி (40), சங்கரலிங்காபுரம் பழனிச்செல்வம் (40), சேர்வைக்காரன்பட்டி அழகுமலை மகன் விஜயகுமார் (22), கொல்கத்தாவை சேர்ந்த அனில் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு 12 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. அவர்களில் அடையாளம் தெரிந்த 6 பேரின் பெயர் விவரம் வருமாறு:
1.வேல்முருகன், புதுத்தெரு, சிவகாசி.
2.மாரிசாமி, பள்ளப்பட்டி.
3.பாலமுருகன்(37) செல்லையா நாயக்கன்பட்டி.
4.மகேஷ்குமார்(35) வாய்பூட்டான்பட்டி.
5.முருகேசன்(35) சங்கரலிங்கபுரம்.
6.தங்கப்பாண்டி(35) முத்துலிங்கபுரம்.
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேட்டமலையை சேர்ந்த பரமசிவம்(40) என்பவரின் உடல் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இதற்கு முன் 1993ம் ஆண்டு டான் பயர் ஒர்க்சில் பெரிய விபத்து நடந்தது. இதில் 36 பேர் இறந்தார்கள். அதற்கு அடுத்து பெரிய பட்டாசு விபத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக