மதுராந்தகம்: இந்த பூமி இருக்கும் வரை, அந்த மேகம் இருக்கும் வரை, திமுக அதிமுகவுடன் கூட்டே கிடையாது என்று அடித்துப் பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.தேர்தல் வரும் வரை ஆளாளுக்கு ஒரு பக்கம் இருப்பார்கள். தேர்தல் வரப் போகிறது என்று தெரிந்தால் போதும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூட்டணி பேச கிளம்பி விடுவார்கள்.அந்த வரிசையில் டாக்டர் ராமதாஸும் தேர்தல் வரும் வரை தனித் தவில் வாசித்துக்
கொண்டிருப்பார். தேர்தல் வருவது உறுதியானால் திமுக அல்லது அதிமுகவுடன் போய் விடுவார். யாருடன் போய்ச் சேரலாம் என்பதற்காக ஒரு வாக்கெடுப்பையே நடத்தி கின்னஸ் சாதனை படைத்தவராச்சே அவர்...
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு இனி திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று ஊர் ஊராக சத்தம் போட்டு பேசி வருகிறார். அவர் பேசுவதைப் பார்த்தால் கண்டிப்பாக இவர்களில் ஒருவரோடுநிச்சயம் அவர் சேருவார் என்றே அவரைப் பற்றி அறிந்தவர்கள் திட்டவட்டமாக நம்புகிறார்கள்.
இந்த பின்னணியில் மதுராந்தகத்தில் நடந்த பாமக போராட்டத்தின்போது வானம் இருக்கும் வரை, மேகம் இருக்கும் வரை திமுக, அதிமுகவுடன் கூட்டே கிடையாது என்று அசத்தலாகப் பேசி கூட்டத்தினரிடம் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டார் ராமதாஸ்.
செப்டம்பர் 5-ந் தேதி பாமக சார்பில், மதுராந்தகம் ஏரியில் நானே தலையில் மண் சுமந்து தூர் எடுப்பேன் என்று அறிவித்திருந்தார் ராமதாஸ். அதன்படி அவரும் ஏரிக்கு வந்தார். உள்ளே இறங்கி தூர் வாரக் கிளம்பினார். ஆனால் அதெல்லாம் அனுமதிக்க முடியாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் ஏரிக்குள் ராமதாஸ் இறங்கவில்லை. மாறாக வடக்கு பை-பாஸ் சாலையில் மதுராந்தகம் ஏரியை தூர் வாரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ராமதாஸ் பேசுகையில்,
மதுராந்தகம் ஏரியை தூர்வார சென்றால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுமதி இல்லை என்று மறுத்து விட்டனர். இந்த ஏரி தூர் வாரப்படவில்லை என்றால் விரைவில் ஏரிக்கரையில் நின்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
2002 சித்திரை மாதத்தில் 500 ஏரி, குளங்களை நானே முன்னின்று தூர் எடுத்து உள்ளேன். 400 தடுப்பணைகளை பாமக சார்பில் கட்டி உள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு, இந்த ஏரிக்குள்ளே போகக்கூடாது என்கிறார்கள்.
இலவசங்களை கொடுத்து வறுமையை அதிகமாக்குகிறார்கள். பூமி இருக்கிற வரையில், மேகம் இருக்கிற வரையில், இனி திமுக, அதிமுக கட்சிகளோடு கூட்டு கிடையாது என்றார் ராமதாஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக