இடிந்தகரை: கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரையில் கிராம மக்கள் கழுத்தளவு மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அணுஉலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் பங்கேற்றனர். அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வரும் நிலையில் அணுஉலைக்கு எதிரான போராட்டமும்
அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பட்டினிப் போராட்டம், முற்றுகை என போராடிய மக்கள் கல்லறைகளில் குடியேறியும், கழுத்தளவு மணலில் புதைந்தும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று இடிந்தகரைக்கு சென்று போராட்டக்குழுவினரை சந்தித்துப் பேசினார்.
15 நாட்களுக்குப் பின்னர் உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட போராட்ட குழு தலைவர்கள் வைகோவுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் கடற்கரையில் கழுத்தளவு மணலில் புதைந்து போராட்டம் நடத்திய குழுவினருடன் வைகோவும் மணலில் புதைந்து பங்கேற்றார்.
ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களும், பெண்களும் மணலில் புதைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் பேசிய வைகோ, கூடங்குளம் அணுமின் நிலையம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இடிந்தகரையில், ஓராண்டுக்கும் மேலாக அமைதி வழியில், அறவழியில், பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர். இம்மாதிரி ஒரு போராட்டம், ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில் நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடினர். அவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையை கையாண்டு தடியடி நடத்தியுள்ளது. இந்த போராட்டம் அணுஉலையை மூடும் வரை தொடரும் என்றார்.
அதன் பின்னர் கடற்படை விமானம் தாழ்வாக பறந்ததில் உயிரிழந்த மீனவர் சகாயம் குடும்பத்தினருக்கு 50000 ரூபாய் நிதியையும் வைகோ வழங்கி ஆறுதல் கூறினார்.
கூட்டத்தில் பேசிய உதயகுமார், வியாழக்கிழமை மாலை இடிந்தகரையில் அணு சக்திக்கு எதிரான அனைத்து அரசியல் இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து பேசி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக