சனி, செப்டம்பர் 22, 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு: போராட்டம் ஓயவில்லை – பாகிஸ்தானில் 20 பேர் பலி !

20 Dead in Pakistan Protestsஇஸ்லாமாபாத்:இறைத்தூதரை அவமதிக்கும் இழிவான செயலை கயவர்கள் தொடரும் நிலையில் உலகம் முழுவதும் முஸ்லிம் உலகில் போராட்டம் தொடருகிறது. அமெரிக்க தயாரிப்பான திரைப்படத்தின் காட்சிகள், பிரான்சு நாட்டு பத்திரிகையில் வெளியான கார்ட்டூன் ஆகியன உலக முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது. தங்களது உயிரினும் மேலான இறைத்தூதரை
அவமதிக்கும் இழிவான செயலுக்கு கண்டனம் தெரிவித்து உலகின் பல நாடுகளில் முஸ்லிம்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானில் நேற்று(ஜும்ஆ) வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு போராட்டம் நடைபெற்ற பல நகரங்களிலும் வன்முறை நிகழ்ந்தது. வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவரில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு ஆறுபேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து கொதித்துப்போன மக்கள் அங்குள்ள 3 தியேட்டர்களுக்கு தீவைத்தார்கள்.
கராச்சியில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன. ஏராளமான வாகனங்களும், கடைகளும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தீக்கிரையாக்கினர். ஆளுங்கட்சி-எதிர்கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஸ்ரஃப் கூட அமைதியாக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.
போராட்டம் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா குடிமக்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதுக் குறித்து அந்நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. போராட்டம் தொடரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலியா தூதரகம் மூடப்பட்டுள்ளது. அமெரிக்க தூதர் ரிச்சார்ட் ஹோக்லாண்டை அழைத்து பாகிஸ்தான் அரசு தனது எதிர்ப்பை தெரிவித்தது. யூ ட்யூபில் இருந்து இறைத்தூதரை அவமதிக்கும் காட்சியை நீக்கம் செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஹோக்லாண்டிடம் பாக். அரசு கோரிக்கை விடுத்தது. இதனை பாக்.வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக