டெல்லி: டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகிய நடவடிக்கைகளை எடுத்த மத்திய அரசு இதனை நியாயப்படுத்த பாடாய்பட்டு வருகிறது! மத்திய அரசு தமது நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் விளம்பரம் செய்ய ரூ100 கோடி வரை செலவும் செய்திருக்கிறது!டீசல் விலை உயர்வு.. கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு என அதிரடி சுமைகளை சுமத்திய மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு
அனுமதி என்று பெரும்போடும் போட்டது. இதில் மத்திய அரசே ஆட்டம் கண்டுவிட்டது. கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கழன்று கொண்டது.
இதையடுத்து தமது அரசாங்கத்தின் செயல்பாடுகள் சரியானதுதான் என்பதை நியாயப்படுத்தி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார் பிரதமர் மன்மோகன்சிங். தமது செயலை நியாயப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு "பணம் மரத்துல காய்க்கலை" என்ற வார்த்தையை பயன்படுத்தினார் மன்மோகன்சிங். பொதுமக்களும் இப்பொழுது அரசாங்கத்தை நோக்கி" எங்களுக்கு மட்டுமா பணம் மரத்துல காய்க்கிறது?" என்று எதிர்கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் டீசல் விலை உயர்வு ,சில்லரை வர்த்தகத்தில் அனுமதி என அறிவிப்பு வெளியிட்ட கையோடு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்து இமேஜை சரி செய்ய முயற்சித்து வருகிறது. இதற்காக ரூ100 கோடி வரை செலவிட்டிருக்கிறது மத்திய அரசு!
இந்த விளம்பரத்தை தேசிய ஊடகங்களில் மட்டுமின்றி விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கும் அந்தந்த மாநில மொழிகளில் விளம்பரங்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாஜக மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை வீணடித்து வருகிறது. மக்களின் மீது சுமையை சுமத்துவதுவதற்கு முன்பு மத்திய அரசு தம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக