டெல்லி:டீசல் விலை உயர்வு, சிலிண்டருக்கு விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து நேற்று நாடு தழுவிய அளவில் நடத்திய பந்த்தால், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சில மாநிலங்களில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் திமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள்
இந்த பந்திற்கு ஆதரவு தெரிவித்தன. மேலும் வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை பந்த்திற்கு ஆதரவளித்தன. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்தால் மதுரா, ஆக்ரா, வாரணாசி, அலககாபாத் மற்றும் லக்னோவுக்கான ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆக்ரா- குவாலியர் நெடுஞ்சாலையில் வர்த்தகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. லக்னோவின் சுல்தான்பூரில் உள்ள வால்மார்ட் அங்காடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலத்திலும் முற்றிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் முழுவதுமாக ஓடவில்லை.
இதேப்போன்று பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலான கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆட்டோக்கள் முழுவதும் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பாதியளவு பேருந்துகளே இயக்கப்பட்டன. தமிழகத்தில் லாரிகள் முழுவதும் இயக்கப்படவில்லை. தொழில் நகரமான திருப்பூரில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் முதல் ஹோட்டல்கள், மெக்கானிக் ஷாப்புகள், டீக்கடைகள் என சகல விதமான கடைகளும் பெருமளவில் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் பல பகுதிகளில் சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
சென்னையைப் பொறுத்தவரையில் ஐடி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டன. இயல்பு நிலை சென்னையில் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதால் ஐடி நிறுவனங்களின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக