பாக்தாத்:ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் குண்டுவீச்சில் இரு கைகளையும் இழந்து உடல் முழுவதும் காயமடைந்தபொழுது தனக்கும் இனியொரு வாழ்வு கிடைக்கும் என அப்பாஸ் சிந்தித்துக் கூட இருக்கமாட்டார். 21 வயதை தாண்டிவிட்ட அலி அப்பாஸுக்கு மனைவியாக அன்கம் வந்தது இறைவனின் நிச்சயமாகும். அமெரிக்க ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உடலின் 60 சதவீதமும் காயமடைந்த அலியின் குடும்பத்தில் 16 பேரும் கொல்லப்பட்டனர். இரு கைகளையும் இழந்து மருத்துவமனையில் வேதனையால் துவளும் அலியின் புகைப்படம் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பின் சின்னமாக அன்று
ஊடகங்கள் எடுத்துக்காட்டின. அலியைப் போலவே பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களின் வாழ்க்கையை சின்னாப்பின்னமாக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பின் கறுப்பு தினங்களின் நினைவலைகளை அலி அப்பாஸ், பிரிட்டீஷ் பத்திரிகையான தி சன்னுடன் பகிர்ந்துகொண்டார்.
ஈராக் மருத்துவர்களின் கோரிக்கையின் படி அறுவை சிகிட்சைக்காக அலி, குவைத் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு தெற்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் குழு பல மணிநேரங்கள் போராடி அலிக்கு செயற்கை கைகளை பொருத்தினர். 2010 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டன் குடியுரிமை அலிக்கு கிடைத்தது. பல முறை ஈராக்கிற்கு வந்துள்ள அலி, தனது உயிருடன் இருக்கும் இதர குடும்ப உறுப்பினர்களும் தங்கினார். இதனிடையே அவர் அன்கமை சந்தித்தார். குழந்தைப் பருவத்தில் அழகான தோழியை மீண்டும் கண்டபொழுது அலிக்கு, தனது கண்களையே நம்ப முடியவில்லை. நினைவுகளை மீட்டிய இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவெடுத்தனர்.
ஈராக்கில் பாரம்பரிய முறைப்படி திருமணம் முடிந்தது. தன்னையும், அன்கமையும் எப்பொழுதும் கிண்டலடிக்கும் தனது தாயாரின் வார்த்தைகளை நினைவுக் கூறும்பொழுது அப்பாஸுக்கு கண்களில் கண்ணீர் தழும்பியது. தனது திருமணத்தை காண, தாயார் இல்லையே என்ற துக்கம் அலிக்கு உண்டு. பிரிட்டனில் உள்ள அலி, அன்கமிற்கு விசா ஏற்பாடுச் செய்யும் முயற்சியில் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக