டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் குறைவான நேரமே பேச ஒதுக்கி தம்மையும் தமிழக அரசையும் மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது, கேவலப்படுத்திவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கொந்தளித்திருக்கிறார். டெல்லியில் 57-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங் இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் மாநில முதல்வர்கள் பேசினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்த போது 10-வது நிமிடத்தில் மணி அடித்து அவரை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஜெயலலிதா தமது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வெளிநடப்பு செய்தார். பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மத்திய அரசு கூட்டிய தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் பேசுவதற்ககு போதுமான நேரம் ஒதுக்கப்படாமல் மாநில முதலமைச்சர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். நான் பேசத் தொடங்கிய 10-வது நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டு என் பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை அவமதிக்கும் செயல். அந்த 10 நிமிடத்தில் நான் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ அதை சொல்ல முடியவில்லை. நான் பேச நினைத்ததில் 3-ல் ஒரு பங்கைத்தான் சொல்ல முடிந்தது. ஒரு மாநிலத்தின் தேவைகள் பற்றி 10 நிமிடத்தில் கூறிவிட முடியாது. இதற்கு முன்பும் முதல்வர்கள் பங்கேற்ற பல மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இப்படி நடந்தது இல்லை. இதற்கு முன்பும் எத்தனையோ கூட்டங்களில் பேசியிருக்கிறேன். மத்திய அரசுக்கு ஆதரவான முதல்வர்கள் பேசுவதற்கு 30,35 நிமிடம் பேச அனுமதிக்கப்படுக்றது. கடைசியாக நடைபெற்ற மாநாட்டில் கூட அசாம் முதல்வர் 35 நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் மணியடிக்கவில்லை. நிறுத்திக் கொள்ளவும் கட்டளையிடவில்லை. ஆனால் 10 நிமிடங்கள் ஆனவுடன் என் பேச்சை நிறுத்துமாறு கூறி அவமானப்படுத்திவிட்டனர். இது தமிழகத்தை தமிழக மாநிலத்தையே அவமதிக்கக் கூடியதாக இருக்கிறது. மத்திய அரசு என்னை கேவலப்படுத்திவிட்டது. ஒரு மாநில முதல்வரை இவ்வளவு தூரம் டெல்லி வருமாறு அழைத்துவிட்டு பேசுவதற்கு அனுமதி மறுப்பதற்கு பதிலாக இத்தகைய கூட்டங்களை இனி மத்திய அரசு நடத்தாமல் இருப்பதே நல்லது. டெல்லிக்கு வரவழைத்துவிட்டு குரல்வளையை நெறித்துவிட்டு ஏன் இப்படி மத்திய அரசு அவமானப்படுத்த வேண்டும்? கேவலப்படுத்த வேண்டும்? இதற்காகவே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன். மத்திய அரசுக்கு ஆதரவாக இல்லாத எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர்கள் மீதான மத்திய அரசின் புதிய அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கொந்தளிப்புடன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக