ஞாயிறு, டிசம்பர் 23, 2012

புஷ்வாணமாகி போன உலக அழிவு பிரச்சாரம் !

மெக்சிக்கோ சிட்டி:எதுவும் சம்பவிக்காமல் உலக அழிவு தினம் கடந்து சென்றது. உலகம் அழியும் என கற்பனை கோட்டைகளை கட்டி அதற்காக ஏற்பாடு செய்தவை அனைத்தும் வீணாகிப்போனதால், புதிய உலகத்தை வரவேற்று 2-ஆம் கட்ட வாழ்க்கைக்கு மாயன் சமூகத்தினர் துவக்கம் குறித்துள்ளனர். 5125 ஆண்டுகள் பழமையான மாயன் காலண்டரை கூறித்தான் உலக அழிவு தினம் என்ற வதந்தி உலகம் முழுவதும் பிரச்சாரம்
நடந்தது. மெக்சிக்கோ, குவாட்டிமாலா ஆகிய நாடுகளில் வசித்த பழமையான குலம் தான் மாயன் சமூகத்தினர். அவர்களின் காலண்டரில் 2012 டிசம்பர் 21-ஆம் தேதி வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக நேற்று உலகம் அழிந்துவிடும் என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இறைத்தூதர் நபி ஈஸா(யேசு) அவர்களின் காலத்திற்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மாயன் சமூக கலாச்சாரத்தை ஆதரிப்பவர்கள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலும் உள்ளனர். அதியமான கிரகம் ஒன்று பூமியுடன் மோதி உலகம் அழியும் என்று பிரச்சாரம் நடந்தது.
உலக மக்கள் தொகையில் 6 இல் ஒருவர் இதனை நம்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பான் மற்றும் இந்தோனேஷியாவில் அண்மையில் நடந்த பூகம்பங்கள், உலக அழிவின் துவக்கம் என்றும் பிரச்சாரங்கள் நடந்தன. சீனா மற்றும் மெக்சிக்கோவில் மூட நம்பிக்கைகளை பரப்பிய பலர் கைது செய்யப்பட்டனர்.
உலக அழிவை எதிர்கொள்ள சிலர் நவீன பங்கர்களை (பாதாள பாதுகாப்பு அரண்) தயாரித்து அதில் அபயம் தேடினர். சிலர் அதிகமாக மது அருந்தி வீதிகளில் கிடந்த பொழுது, மற்றும் சிலரோ பிரார்த்தனைகளில் மூழ்கினர். இறுதியில் சூரியன் வழக்கமாக உதிக்கவும், மறையவும் செய்த பொழுது இவர்கள் புதிய உலகை வரவேற்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர்.
அதே வேளையில் பிரான்சில் மலை கிராமமான புகாரக்கிற்கு வியாழக்கிழமை முதல் மக்கள் வரத்துவங்கினர். முன்னரே அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே கிராமத்தில் நுழைய முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இக்கிராமத்திற்கு வந்தனர். உலகம் அழிந்தாலும் புகாரக் கிராமம் மட்டுமே மிச்சமிருக்கும் என்ற வதந்தியும் பரவியதே இதற்கு காரணம். இக்கிராமத்தில் வழக்கமாக 200-க்கும் குறைவானவர்களே வசிக்கினறனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக