ஞாயிறு, டிசம்பர் 23, 2012

மது போதையால்தான் பாலியல் குற்றங்கள்… மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும்: வைகோ !

பாலியல் குற்றங்கள் அனைத்தும் மதுபோதையால்தான் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு மக்கள் சக்தியை திரட்டிப் போராடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருநெல்வேலி மாவட்டம், உவரியிலிருந்து மதுரை வரையில் தொண்டர்களுடன் வைகோ விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார்புரம் கிராமத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வெள்ளிக்கிழமை இரவு எரிச்சநத்தம் கிராமத்துக்கு அவர் வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி மாவட்டம், செங்துங்கநல்லூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை மது போதையால்தான் நடந்துள்ளன. இச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் சக்தியை திரட்டுவேன் இதுபோன்ற நிலை நமது கிராமங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழகத்திலுள்ள மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நாங்கள் போராடிவருகிறோம். இங்கு பூரண மதுவிலக்கை அமல் படுத்தும்வரை போராடுவேன். இதற்காகத்தான் மக்கள் சக்தியை திரட்டுகிறேன். மதுக் கடைகளை மூடினால், இளைஞர்கள், மாணவர்கள் குடியிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். இளைஞர்கள், மாணவ சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடுவேன். வாக்கு கேட்டு வரவில்லை கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தேன், அதற்காக வருத்தப்படவில்லை. தற்போது, அடுத்து வரவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு வாக்குக் கேட்டுத்தான் முன்னதாகவே நான் கிராமங்களுக்குச் செல்வதாக சிலர் கூறுகிறார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை இவ்வாறு வைகோ தெரிவித்தார். முன்னதாக வைகோ எரிச்சநத்தம் ஊரில் பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் குடும்பத்தினருக்கு 25000 ரூபாய் நிதி உதவி அளித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக