கேரளாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திருவனந்தபுரத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது ரூ. 300 கோடி நகைக்காக இந்தக் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவரின் பெயர் ஹரிஹர வர்மா. இவர் மாவேலிக்கரை மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 59 வயதான இவர் திருவனந்தபுரம் புறநகரான வெட்டியூர்காவு என்ற இடத்திற்கு அருகே உள்ள புத்துதூர்கோணம் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர் வைர வியாபாரியாக இருந்து வந்தார். திங்கள்கிழமை இவர் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கொலைக்குப் பின்னர் ஹரிஹர வர்மா வீட்டில் இருந்து ரூ. 300 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை அக்கும்பல் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட 3 கொள்ளையர்களில் பிரேம்ராஜ் மற்றும் யோகேஷ் என இருவரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனராம். இவர்கள் சென்னையிலிருந்து வைரக் கற்களை வாங்க வந்ததாகவும், ஆனால் கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பியுள்ளதாகவும் போலீஸார் கூறுகிறார்கள். கொள்ளையர்கள் சென்னைக்குப் போயிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக