அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 182 எம்.எல்.ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. மேலும் புதிய எம்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து ஆவணக் கணக்குகளை வைத்து இந்த விவரம் வெளியிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் எலக்ஷன் வாட்ச் அமைப்பின் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர் கூறியதாவது... மொத்தம் உள்ள 182 எம்.பிக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது மொத்த உறுப்பினர்களில் 31 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 24 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி என தீவிரமான வழக்குகள் உள்ளன. பாஜகவின் அமீத் ஷா, சங்கர் செளத்ரி, ஜேத்தா பர்வத், ஐக்கிய ஜனதாதளத்தின் சோட்டுபாய் வாசவா, காங்கிரஸின் ஜாசுபாய் பர்வத் ஆகியோர் மீது மிகவும் தீவிரமான வழக்குகள் உள்ளன. வாசவா மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி என 15 வழக்குகள் உள்ளன. அமீத் ஷா மீது சோராபுதீன், அவரது மனைவி கெளசர் பீ, துள்சிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டரில் கொன்றதாக வழக்கு உள்ளது. பர்வத் மீது கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இவர் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தபோது 1998ம் ஆண்டு தொடரப்பட்டதாகும். பின்னர் இவர் அரசியலுக்கு வந்த பிறகு வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது. கடந்த சட்டசபையில் 26 சதவீத கிரிமினல் வழக்குகளைக் கொண்டவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த முறை இது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தம் உள்ள 182 உறுப்பினர்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 86 பேர் ஆவர். காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் 43 பேர். ஒவ்வொரு பாஜக எம்.எல்.ஏவின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடியாகும். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 12.36 கோடியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக