முதல்வர்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவை மத்திய அரசு அவமதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா வெளிநடப்பு என்று நாடகம் நடத்தி உள்ளார் என்று திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் கூறினார். நெல்லை நாடாளுமன்றத் தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பாளை ரெட்டியார்பட்டியில் நடந்தது. நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், கடந்த 15ம் தேதி திருச்சியில் முதல் நாடாளுமன்ற செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது. இது 9வது செயல்வீரர்கள் கூட்டம். தேர்தலில் இப்படி பணியாற்ற வேண்டும் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஆலோசனைகளை கேட்டு உங்களில் ஒருவனாக செயல்பட வந்துள்ளேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக சிந்திக்கும் ஒரே கட்சி திமுக தான். நம்மைப்போல் வெற்றி அடைந்தவர்களும் இல்லை. தோல்வியை கண்டவர்களும் இல்லை. வெற்றி தோல்வியை சமமாக கருதுபவர்கள்தான் திமுகவினர். கருணாநிதி என்றும் மக்களுக்காக பணியாற்றி வருகிறார். நாம்தான் ஆளும் கட்சி என்று மக்கள் நம்மிடம் தான் குறைகளை சொல்கிறார்கள். டெல்லயில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் நானும் முன்பு கலந்து கொண்டுள்ளேன். நாம் நமக்கு என்ன என்ன வேண்டும் என்று பேச நினைக்கிறோமோ அதை தயார் செய்து முன்கூட்டியே பிரதமர் கையில் கொடுத்து விடுவோம். கூட்டத்தில் அதில் குறிப்பிட்டுள்ள கருத்துகளை பேசுவோம். அப்போது நீண்ட நேரம் பேசினால் மணி அடிப்பது வழக்கம். ஆனால் மணி அடித்தவுடன் பேசக்கூடாது என்பது மரபல்ல. அதன்பிறகு தேவைப்பட்டால் நாம் கூற நினைப்பதை பேசிவிட்டு அமரலாம். அதுவும் ஒவ்வொரு மாநில முதல்வர்களையும் ஆங்கில முதல் எழுத்து வரிசைப்படிதான் பேச கூப்பிடுவார்கள். ஆனால் ஜெயலலிதா முன்கூட்டியே பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு பேசி விட்டு , வெளிநடப்பு என்று நாடகம் நடத்தி உள்ளார். அவரை டெல்லியில் மத்திய அரசு அவமதிக்கவில்லை. ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக்கு பிறகும் மின் வெட்டுக்கு காரணம் திமுக தான் என்று கூறுகிறார் ஜெயலலிதா. அவர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறது. விவசாயிகள் தற்கொலை சம்பவங்களை அரசு மூடி மறைக்கிறது. தி.மு.க. நடத்தும் நாடாளுமன்ற தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தை ஜெயலலிதா அரசு தடுத்து வருகிறது. சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடாது. தூத்துக்குடி கூட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு திட்டமிட்டப்படி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வந்தாலும் நாம் தயாராக இருக்கவே இந்த ஆலோசனை கூட்டம். நீங்கள் வீட்டுக்கு வீடு திண்ணை பிரசாரம் செய்து தீவிரமாக பணியாற்றினால் 40-க்கு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற முடியும் என்றார் ஸ்டாலின். தூத்துக்குடியில் மறியல்-ஜெயதுரை எம்.பி. உள்பட திமுகவினர் கைது: இதற்கிடையே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக திமுகவினர் தூத்துக்குடி முழுவதும் வரவேற்பு பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைத்துள்ளனர். ஆனால். தூத்துக்குடி தொகுதி எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைத்த பேனர்களுக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதுபற்றி ஜெயதுரை எம்.பி. தொண்டர்களுடன் தூத்துக்குடி தென்பாகம் மற்றும் வடபாகம் போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீசாருடன் விளக்கம் கேட்டார். பின்னர் போலீசை கண்டித்து தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு ஜெயதுரை எம்.பி. தலைமையில் திமுகவினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயதுரை எம்.பி. உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக