சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தனியார் பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டம், குப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தி (40). இவரது கணவர் சரவணன். இவர்கள் மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் பகுதியில் உள்ள உப்புப்பள்ளம் என்ற இடத்திலும், மேச்சேரி வேடன் கரடு மலைக் குன்றிலும் கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் வானவெடி பட்டாசுகளைத் தயாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உப்புப்பள்ளம் பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்தில் சரவணன் உயிரிழந்தார். இதையடுத்து, வேடன் கரடு பகுதியில் உள்ள தொழிற்சாலையை சாந்தி நடத்தி வந்தார். இங்குள்ள 3 கட்டடங்களில் மேச்சேரி சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கிடங்கு வேறு பகுதியில் இருந்த நிலையில் பட்டாசுகளுக்கு மருந்து, திரி அடைக்கும் பணி மட்டும் இங்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,நேற்று மதியம் 2 மணியளவில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் மருந்து கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவியதில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ வெடி மருந்து, ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நாட்டு வெடிகள் உள்ளிட்டவை வெடித்து சிதறின.
இதில் கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகின.மேலும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 13 தொழிலாளர்கள் பல மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் சாந்தி, இவரது மகன் சூர்யா (11), தொழிலாளர்கள் சிவகாமி (35), கேசவன் (13) ஆகிய நான்கு பேரும் உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சில நிமிஷங்களில் தங்கம் (50) என்பவர் உயிரிழந்தார். மேலும், ஈஸ்வரி (35), விஜயா (33) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காயமடைந்திருந்த பள்ளி மாணவி தீபா (12) இரவு 8 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் மனோஜ்குமார் (12), விமலா (17), பவித்ரா (11), சதீஷ் (15), பழனியப்பன் (45) ஆகிய 5 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மேட்டூர், சிஸ்கால், ஓமலூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் 15 பேர், பட்டாசுகள் மேலும் வெடிக்காமல் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக