வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஃபலஸ்தீன்: சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக குழந்தைகள் நடத்திய பேரணி !

காஸ்ஸா சிட்டி: இஸ்ரேல் அதிகாரிகளால் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களின் குழந்தைகள் காஸ்ஸாவில் மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். தங்களின் உற்றார்களை காலவரையற்று சிறையில் அடைத்துள்ள நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குழந்தைகள் இஸ்ரேல் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத சிறைக்கு எதிராக இஸ்ரேல் சிறையில் பல மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஸமர் இஸாவி மற்றும் அய்மன் ஷர்வான் ஆகியோரின் படங்களை ஏந்தியவாறு காஸ்ஸாவில் உள்ள ரெட்க்ராஸ் தலைமையகம் நோக்கி குழந்தைகள் பேரணி நடத்தினர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இவர்களில் பெரும்பாலோர் விசாரணையோ, வழக்கு பதிவோ இல்லாமல் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை தனிமை சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்வதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அடிப்படை வசதிகளை மறுத்து, குடும்பத்தினரை சந்திப்பதற்கு அனுமதி மறுத்து பல வருடங்களாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதற்கு எதிராக சிறைக்குள்ளேயே ஃபலஸ்தீன் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
ஆறு ஃபலஸ்தீன் கைதிகள் இன்னமும் உண்ணாவிரதத்தை தொடருகின்றனர். இவர்கள விடுவிக்க சர்வதேச சமூகம், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஃபலஸ்தீன் லிபரேசன் ஆர்கனைசேசன் கோரிக்கை விடுத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக