மதுரை: எனது தந்தையான மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, எனது தாயார் காந்தி அழகிரி உள்பட எனது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் கிரானைட் விவகாரத்தில் தொடர்பில்லை. உண்மையில் இந்தத் தொழிலில் சேர வேண்டாம் என்றுதான் எனது தந்தை சொன்னார் என்று கூறியுள்ளார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. கிராடனைட் மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த துரை தயாநிதி, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரிடம் மேலூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முழுவதும் நடந்த இந்த விசாரணையின்போது துரை தயாநிதியிடம், அவர் இயக்குநராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது துரைதயாநிதி கூறுகையில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் சிறிது காலம் சைலண்ட் பார்ட்னராக இருந்தேன். அதன் பின்னர் அதிலிருந்தும் விலகிவிட்டேன். ஆனால் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் சட்டவிதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் என் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தான் என் மீது போலீசார் போட்டுள்ள முதல் வழக்ககாகும். இது தவிர கிளவுட் நைன் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தினேன். அதில்தான் முழு கவனம் செலுத்தி வந்தேன். கிரானைட் தொழிலில் நான் பங்குதாரராக சேர்ந்ததற்கும், எனது தந்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தாயார் காந்தி அழகிரி மற்றும் குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் இந்த தொழிலில் நான் சேர்ந்தபோது எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏதாவது தொழிலை திறம்பட செய் என்று அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும் நான் சிறிது காலம் கிரானைட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வந்தேன். நான் இருந்த காலத்தில் அந்த நிறுவனத்தில் ஏதாவது முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் என்று கூறியுள்ளாராம் துரை தயாநிதி. அவரது வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அவரிடம் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்றும் போலீஸ் தரப்பில் துரை தயாநிதியிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக