வெள்ளி, டிசம்பர் 28, 2012

மீண்டும் டீசல், மண்ணெண்ணெய் விலை ரூ. 10 உயரும்?

புதுடெல்லி: டீசல் விலையை மாதம் ஒரு ரூபாய் வீதம் அடுத்த 10 மாதத்தில் ரூ.10 வரை உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை இரண்டும் மானிய விலையில் விற்கப்படுவதால், அரசுக்கு கடும் நிதி தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் ரூ.1,60,000 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.டீசல் விலையை லிட்டருக்கு மாதம்தோறும் ரூ.1 என்ற வீதத்தில், அடுத்த 10 மாதங்களுக்குள் ரூ.10 உயர்த்தலாம் என்றும், இதேபோல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மண்ணெண்ணெய் விலையை இதே அளவுக்கு உயர்த்தலாம் என்றும் பெட்ரோலியத் துறையால் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, பெட்ரோலியத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.9.28 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, டீசல் விலையை மாதம் ரூ.1 வீதம் 10 மாதத்தில் 10 ரூபாய் உயர்த்தும்போது நஷ்டம் முழுவதும் சமாளிக்கப்படும். 

மண்ணெண்ணெய்க்கும் 2 ஆண்டு காலத்தில் 24 மாதத்தத்துக்கு லிட்டருக்கு சுமார் 42 பைசா என்ற அளவில் உயர்த்துவதன் மூலம் ரூ.10 கூடுதலாக கிடைக்கும். இதனால் மண்ணெண்ணெய் விற்பனையில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தையும் சமாளிக்க முடியும். விலை உயர்வு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் விலை உயர்வு அமலுக்கு வரும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக