திங்கள், டிசம்பர் 31, 2012

டெல்லி மாணவி உடல் ரகசியமாக தகனம் !

இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த 23 வயது மாணவியின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலையில் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.பாதுகாப்பு கருதி அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தை டெல்லி அரசும் போலீஸாரும் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.இறுதிச் சடங்கில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தில்லியில் கடந்த 16-ம் தேதி இரவு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான
அந்த மாணவி மறுநாள் அதிகாலையில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மத்திய அரசின் ஏற்பாட்டில், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துமனையில் கடந்த 27-ம் தேதி அவர் சேர்க்கப்பட்டார்.
சிங்கப்பூரில் பிரேத பரிசோதனை: அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த சனிக்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
இந்திய அரசின் வேண்டுகோளின்படி அந்த மருத்துவமனையிலேயே அவரது பிரேத பரிசோதனை நடைமுறைகள் முடிக்கப்பட்டன.
சனிக்கிழமை இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து மாணவியின் உடலுடன் புறப்பட்ட தனி விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு டெல்லி வந்தது. விமானத்தில் மாணவியின் பெற்றோர், இரு சகோதரர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உடன் வந்தனர். மாணவியின் உடலை பார்ப்பதற்காக மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் பொதுமக்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 11 மணி முதல் திரண்டிருந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, அவரது உடலைக் கொண்டு வந்த விமானம், அருகே உள்ள பாலம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டது.
அங்குதான் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாட்டுத் தலைவர்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் சிறப்பு விமான தளம் உள்ளது.
மாணவியின் உடலைப் பெறுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் ஆகியோர் பாலம் விமானப் படை தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை2 மணிக்கு வந்தனர். கண்ணீர் மல்க மகளின் உடலைக் கொண்டு வந்த அவரது பெற்றோர், இரண்டு சகோதரர்களுக்கு பிரதமர், சோனியா காந்தி, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். அதைத் தொடர்ந்து தெற்கு டெல்லியில் மாணவி வசித்த குடியிருப்புக்கு, மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
வீட்டு வாயிலில், ஆம்புலன்ஸுக்குள் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அவரது குடும்பத்தினர் இந்து மத சம்பிரதாயப்படி சடங்குகளைச் செய்தனர்.
ஒரு மணி நேர சடங்குக்குப் பிறகு மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் மாணவியின் உடல் பலத்த பாதுகாப்புடன் துவாரகா 24-வது செக்டரில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இரு போலீஸ் பஸ்களில் மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
துவாரகா மயானத்தில் தகனம்: துவாரகா மயானத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்,மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங், தில்லி போலீஸ் ஆணையர் நீரஜ் குமார், சிறப்பு போலீஸ் ஆணையர் தர்மேந்திர குமார், உறவினர்கள் கலந்து கொண்டு மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர்,காலை 7.30 மணிக்கு சகோதரர்கள் முன்னிலையில் மாணவியின் உடலுக்கு அவரது தந்தை தீ மூட்டினார். இதையொட்டி அந்த மயானம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். செய்தியாளர்கள், தொலைக்காட்சி குழுவினர் மயான பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
செய்தியை ரகசியமாக வைத்திருக்க நடவடிக்கை: மாணவியின் உடல் வரும்போது அது தொடர்பான செய்திகளை நேரலையாக தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றில் ஒளிபரப்ப வேண்டாம் என டெல்லியில் உள்ள எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா கடந்த சனிக்கிழமை இரவு முடிவு செய்திருந்தது. அதன்படி இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த செய்தி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 6 மணிக்கு முன்பாக இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று துவாரகா மயான நிர்வாகிகளை போலீஸார் சனிக்கிழமை நள்ளிரவில் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், சூரியோதயத்துக்கு முன்பு உடலை எரியூட்டுவது இந்து மத சம்பிரதாயத்துக்கு எதிரானது என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சூரியோதயத்துக்குப் பிறகு காலை 7.30 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல, அந்த மாணவியின் உடலை டெல்லிக்கு கொண்டு வராமல் சிங்கப்பூரில் இருந்து நேரடியாக வாராணசி அல்லது லக்னோ வழியாக உத்தரப்பிரதேசம்-பீகார் எல்லையில் உள்ள அவரது சொந்த ஊரான பலியாவுக்கு கொண்டு செல்ல போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், அந்தப் பகுதியில் குறைந்த நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று கருதியதால், டெல்லியிலேயே அவரது உடலை தகனம் செய்ய போலீஸார் ஏற்பாடு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக