திங்கள், டிசம்பர் 31, 2012

லோக்சபா தேர்தலில் காங், பாஜக கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட தயாராவோம்: ஜெயலலிதா !

சென்னை: 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தொண்டர்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி போட்டியிட தயாராவோம். இந்தத் தேர்தலில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெறுவோம். மத்தியில் அதிகாரத்தின் மூலம் நமது அனைத்து உரிமைகளையும் பெறுவோம். அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்குவதற்கு திமுக தலைவர் கருணாநிதி முட்டுக்கட்டை போடுகிறார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுவிடாமல் கருணாநிதி சதி செய்து கொண்டிருக்கிறார். காவிரியை அடகு வைத்த கருணாநிதியின் வரலாற்று பிழையை நாம் சரி செய்வோம். தமிழக மின்சார நிலைமையை சீராக்க போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013-ம் ஆண்டில் தமிழகத்தில் மின்நிலைமை சீராகும். தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவெடுக்கும். வரும் காலத்தில் வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் படைப்போம் என்றார் அவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக