செவ்வாய், மே 29, 2012

விமானிகளின் வேலை நிறுத்தத்தால் ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூபாய் 325 கோடி தான் !

கடந்த 21 நாட்களாக நடந்து வரும் ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தத்தால் இதுவரை சுமார் 325 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு, சர்வதேச வழி தடங்கள் மேலும் குறைக்கப்பட்டு வருகின்றன.
நேற்று கூடிய ஏர் இந்தியாவின் மேலாண்மை குழு, விமானிகளின் வேலை நிறுத்தம் குறித்து விவாதித்ததாகவும்
, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் விமானிகள் உடனடியாக வேலைக்கு திரும்பினால் தான், நீக்கப்பட்ட விமானிகளை மீண்டும் வேலையில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என முடிவெடுத்தது. இதற்கிடயே, ஏர் இந்தியா நிறுவனம், விமானிகளின் வேலை நிறுத்தத்தை சட்டபூர்வமாக செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்த மும்பை நீதிமன்றம், விமானிகளை உடனடியாக வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. எனினும் இந்த நீதிமன்ற உத்தரவிற்கு இது வரை விமானிகளின் பிரதிநிதிகள் செவி சாய்க்கவில்லை. இதனால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மேலும் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் நிலுவையில் இருக்கும் சம்பளம் மற்றும் படிகள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் செலுத்த இயலாது என அமைச்சர் அஜித் சிங் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக