செவ்வாய், மே 22, 2012

கறுப்புப் பணம்:மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் பிரணாப்!

புதுடெல்லி:கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை மக்களவையில் நேற்று(திங்கள் கிழமை) மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இந்த அறிக்கை 97 பக்கங்களை கொண்ட ஆவணமாகும்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான கொள்கைகளையும் வழிமுறைகளையும் மத்திய அரசு வகுத்து வருகிறது என்பதை அறிக்கை விரிவாக விளக்குகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்தியில் லோக்பால் அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தவையும் நியமிக்கலாம், கறுப்புப் பணக்காரர்களை விசாரித்து தண்டிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவலாம், கிரெடிட் – டெபிட் கார்டுகள் மூலம் பொருள்களை வாங்குவதை ஊக்குவிக்கலாம் என்பது உள்பட பல யோசனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
அதே சமயம் இதுவரை கறுப்புப் பணம் வைத்திருந்ததாக பிடிபட்டவர்கள் பற்றிய தகவல்களையோ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குவிந்திருப்பதாகக் கருதப்படும் கறுப்புப்பணத்தின் அளவு எவ்வளவு என்பதையோ தெரிவிக்கவில்லை.
வெள்ளை அறிக்கை ஓர் கண்ணோட்டம்:
முன்னுரை:இந்த வெள்ளை அறிக்கைக்கு சேர்த்துள்ள முன்னுரையில், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 5 மசோதாக்களைக் கொண்டு வந்ததை பிரணாப் முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
5 மசோதாக்கள்: 1.லோக்பால் மசோதா, 2.நீதித்துறையில் பொறுப்பேற்பைக் கொண்டுவரும் மசோதா, 3.ஊழல்களை அரசின் கவனத்துக்கு ரகசியமாகக் கொண்டுவருவோரை ஊக்குவித்து காப்பாற்றும் மசோதா, 4.குறைதீர்ப்பு மசோதா, 5.அரசுக்குத் தேவைப்படுவனவற்றை உரிய சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பகிரங்கமாகக் கொள்முதல் செய்யும் மசோதா ஆகியவை ஊழலைக் களையவும் கறுப்புப் பணம் பெருகாமல் இருக்கவும் கொண்டுவரப்பட்டுள்ள மசோதாக்களாகும்.
சர்வதேச அளவில் எல்லைக்கு அப்பாலிருந்து வந்து குவியும் சட்டவிரோதப் பணம் குறித்து அந்தந்த நாடுகள், உரிய நாடுகளுக்குத் தகவல் தருவதன் மூலம் கறுப்புப் பண நடமாட்டத்தையும் உற்பத்தியையும் கட்டுப்படுத்தலாம்.
சமூகத்தில் உள்ளவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ஊழலை எதிர்க்கும் எண்ணப் போக்குடன் செயல்பட்டால் கறுப்புப்பணம் குவிவது வெகுவாகக் குறைந்துவிடும் என்கிறது அறிக்கை.
கறுப்புப் பணத்தை தடுக்க என்ன வழி:
கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க 4 அம்ச உத்தி கூறப்பட்டுள்ளது.
1.வரிச்சட்டங்களைத் தாங்களாகவே நேர்மையாகக் கடைப்பிடிப்போருக்கு ஊக்குவிப்பு தரலாம்.
2.பொருளாதாரத்தின் முக்கியமான சில துறைகளில் சீர்திருத்தம் செய்யலாம்.
3.வரி ஏய்ப்பு செய்பவர்களுக்குக் கடுமையாக தண்டனை விதிப்பதன் மூலம் மற்றவர்களை எச்சரித்து வரி செலுத்த வைக்கலாம்.
4.ரியல் எஸ்டேட் என்று அழைக்கப்படும் வீடு, மனை, அடுக்ககம் ஆகியவற்றை விற்பனை செய்யும் துறையில் காணப்படும் ஒழுங்கற்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்தி உண்மையான மதிப்புக்குப் பத்திரம் பதிவு செய்வதையும் அதற்கேற்ப வருமானத்தை நேர்மையாக அறிவித்து வரி செலுத்துவதையும் நடைமுறையாக்கிவிடலாம்.
5.நிதித்துறையிலும் ரியல் எஸ்டேட் துறையிலும் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளால் வரி ஏய்ப்பு செய்யும் எண்ணத்தையே மக்கள் கைவிடும்படி செய்யலாம்.
தங்க இறக்குமதிக்குக் கட்டுப்பாடு இருந்தபோது அதைக் கடத்திக் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. இப்போது அதை தாராளமாக இறக்குமதி செய்துகொள்ள அனுமதித்த பிறகு கடத்தல் நின்றுவிட்டது.
ரியல் எஸ்டேட் துறை மூலம் நம் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 11% வருமானம் கிடைக்கிறது.
இத்துறையில் தேசிய அளவில் தகவல்களை அரசே திரட்ட வேண்டும். மனை, வீடு, அடுக்ககம் ஆகியவற்றை விற்கும்போதே வரியைக் கழித்துக் கொள்வது (டி.டி.எஸ்.) நடைமுறையாக இருக்கவேண்டும்.
இந்த பரிமாற்றங்களுக்கான தொகை முழுவதும் கணினி மூலம் வரவு வைக்கப்பட வேண்டும். ரொக்கப் பரிமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது வெள்ளை அறிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக