வியாழன், மே 24, 2012

இந்திய பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் சிங்கப்பூர் !

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக வைத்தே இந்திய பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளவிலான பெட்ரோலிய விலை லண்டன் சந்தையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டாலும், அதற்கு அடுத்த முக்கிய பங்கை சிங்கப்பூர் பங்குச் சந்தை தான் நிர்ணயிக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் மோட்டார் ஸ்பிரிட் எனப்படும் பென்சீன் ஆகியவற்றின் விலை சிங்கப்பூர் சந்தையில் எந்த நிலையில் உள்ளதோ, அதை வைத்தே இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் சந்தையில் கடந்த 15 நாட்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் சராசரி விலை 109 டாலர் என்றும், மோட்டார் ஸ்பிரிட்டின் சராசரி விலை ஒரு பேரல் 124 டாலர் என்ற நிலையிலும் இருந்தது. இதையும் ஒரு காரணமாக வைத்தே விலை உயர்வை அறிவித்துள்ளனர்.

ஆனால், இந்த வாரத்தில் இதன் விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கச்சா எண்ணெயின் விலை பேரல் 106 டாலராகவும், மோட்டார் ஸ்பிரிட்டின் விலை பேரல் 116 டாலர் என்ற விலைக்கும் சரிந்தது. நேற்று மாலை கச்சா எண்ணெயின் விலை 91 டாலராக மேலும் பெரும் சரிவை சந்தித்தது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவாகும். இதே நிலை அடுத்த வாரமும் தொடர்ந்தால், விலை பெருமளவு குறையும்.

இதனால் அடுத்த சில நாட்களில் மத்திய அரசால் விலை உயர்வை அறிவிக்க முடியும் என்பதே இப்போதுள்ள நிலைமையாகும்.

மாநிலங்கள் வரியை குறைக்க வேண்டும்- மத்திய அரசு:

இதற்கிடையே பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

டெல்லி, ஹரியானா, மணிப்பூர், ராஜஸ்தான், உத்தர்காண்ட், அருணாசலப் பிரதேசம், மிசோரம், ஆந்திரா, மேகாலயா, அஸ்ஸாம் ஆகிய 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல் கட்டமாக இந்த மாநிலங்களில் விற்பனை வரியைக் குறைக்க வைத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களும் விலையைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக