குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார்.அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத்
இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஸாக்கிர் என்பவர் அறிமுகமானார் என கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டதாம். இந்த நிலையில் ருமிநாத் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ஜாகிரை திருமணம் புரிந்ததாக பரபரப்பான செய்தி வெளியானது.
முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்த போது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் ருமி ஜாகிரை மணம்புரிந்து கொண்டதாககூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபிரிவினர் இடையே வன்முறை வெடித்துவிடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தனது திருமணம் குறித்து ராபியா சுல்தானா என்ற ருமி நாத் கூறியது: ஸாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.
அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் இஸ்லாத்தை ஏற்றேன். அதன் பின்னரே திருமணம் புரிந்தேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கோ, ஸாக்கிரை நான் திருமணம் புரியவோ யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன். அமைச்சர் சித்தீக்ஜி அவர்கள் எங்கள் திருமணத்திற்கு இரண்டு காழிகளை(திருமணத்தை நடத்தி வைப்பவர்) ஏற்பாடுச் செய்தார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது கணவருடன் மாநிலத்திற்கு வெளியே சென்றதால் தலைமறைவாகிவிட்டதாக கூறுகிறார்கள்.” இவ்வாறு ருமி கூறியுள்ளார்.
ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சாக்காக வைத்து ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் சில்சார் பகுதியில் கலவரத்தை தூண்டலாம் என அஞ்சப்படுகிறது. சில ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனவாம். ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த கைரி பாரத் என்பவன் ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவத்தை எரித்ததாக ஸீ நியூஸ் கூறுகிறது.
ஸாக்கிர், கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்பூரில் க்ளர்க்காக பணியாற்றி வருபவர். அவரது தந்தை ரஹ்மான் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். ஸாக்கிரின் தந்தை கூறுகையில், ருமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரும் தனது மகனை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸாக்கிர் பங்களாதேஷைச் சார்ந்தவர் என்றும், ருமி பங்களாதேஷுக்கு அவருடன் ஓடிவிட்டதாகவும் அவதூறு செய்தி பரப்பப்படுகிறது. தமிழில் பிரசித்திப்பெற்ற செய்தி இணையதளம் ஒன்றும் இந்த அவதூறுச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், ஸாக்கிர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த இந்திய குடிமகன் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக