கெய்ரோ:ஹும்ஸ் மாகாணத்தில் உள்ள ஹவ்லாவில் சிரியா ராணுவத்தின் வெறிக்கு குழந்தைகள் உள்பட 108 பேர் மரணித்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் வெளிநாட்டு தலையீடு தேவை என எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் வலியுறுத்தியுள்ளது. அரபு நாடுகளும், இதர நாடுகளும் சிரியாவில் கூட்டுப் படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவர
நடவடிக்கை எடுக்கவேண்டும் என இஃவானின் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் கொஸ்லான் தெரிவித்துள்ளார்.
எகிப்து பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, அதிபர் தேர்தலில் முன்னணி வகிக்கும் இஃவானுல் முஸ்லிமீனின் அறிக்கையை அரபுலகம் மிகவும் கவனமாக உற்று நோக்குகிறது.
இதனிடையே சிரியாவின் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதை கொலைச் செய்பவர்களுக்கு நாலரை லட்சம் டாலர் பணம் பரிசாக வழங்க தயார் என்று சவூதி அரேபியாவில் உள்ள மார்க்க அறிஞர் ஒருவர் அறிவித்துள்ளார். அலி அல் ராபிஈ என்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் தனது ட்விட்டர் செய்தியில் இதனை அறிவித்துள்ளார்.
ஹவ்லா கூட்டுப் படுகொலையை நேற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கண்டித்தது. உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா-அரபுலீக் பிரதிநிதி கோஃபி அன்னன் டமாஸ்கஸிற்கு சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக