சனி, ஜூன் 28, 2014

2-வது சுற்றுக்குள் நுழைந்து வரலாறு படைத்தது அல்ஜீரியா

20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு குரிடிபா மைதானத்தில் நடந்த கடைசி லீக்கில் அல்ஜீரியாவும், ரஷியாவும் (எச் பிரிவு) மோதின.
வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற நெருக்கடியில் ரஷியாவும், டிரா செய்தாலே 2-வது சுற்றை எட்டி விடலாம் என்ற சூழலில் அல்ஜீரியாவும் கோதாவில் இறங்கின.

ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் இடது பக்கத்தில் இருந்து ரஷிய வீரர் டிமிட்ரி கோம்பரோவ் தட்டிக்கொடுத்த பந்தை, சக வீரர் அலெக்சாண்டர் கோகோரின் தலையால் முட்டி சூப்பராக கோலாக்கினார். இதையடுத்து பதிலடி கொடுக்க அல்ஜீரிய வீரர்கள் ஆக்ரோஷமாக படையெடுத்தனர். 42-வது மற்றும் 43-வது நிமிடங்களில் அல்ஜீரிய முன்கள வீரர் இஸ்லாம் சிலிமானி, கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய ஷாட்டுகளை ரஷிய கோல் கீப்பர் இகோர் அகின்பீப் முறியடித்தார். இதனால் முதல் பாதியில் ரஷியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் தங்களது உத்வேகத்தை மேலும் தீவிரப்படுத்திய அல்ஜீரியாவுக்கு 60-வது நிமிடத்தில் பலன் கிட்டியது. ‘பிரிகிக்’ வாய்ப்பில், யோசின் பிராமி இடது காலால் உதைத்த ஷாட்டை, கம்பத்தின் முன்பகுதியில் நின்ற அல்ஜீரியா வீரர் இஸ்லாம் சிலிமானி, சரியான உயரத்திற்கு துள்ளி குதித்து தலையால் முட்டி பந்தை வலைக்குள் அனுப்பினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

இதைத் தொடர்ந்து ரஷிய வீரர்கள் அடித்த சில ஷாட்டுகளை அல்ஜீரியா கோல் கீப்பர் ராய்ஸ் போலி தன்னை மிஞ்சாமல் பார்த்துக் கொள்ள, இறுதியில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.

‘டிரா’ ஆனதால் இந்த பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த ஆப்பிரிக்க கண்டத்து தேசமான அல்ஜீரியா 2-வது சுற்றுக்கு முன்னேறி புதிய சரித்திரம் படைத்தது.

உலக கோப்பையில் 32 ஆண்டுகளாக விளையாடி வரும் ‘பாலைவன நரிகள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் அல்ஜீரியா அணி 2-வது சுற்றுக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு பங்கேற்ற 3 உலக கோப்பைகளிலும் அந்த அணி முதல் சுற்றை கடந்தது கிடையாது.

அதே சமயம் ரஷிய அணி (2 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ரஷியா தனிநாடாக பிரிந்த பிறகு இதுவரை உலக கோப்பையில் ஒரு முறையும் முதல் ரவுண்டை தாண்டியதில்லை. இந்த உலக கோப்பையிலும் அதே பரிதாபம் தொடருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக