வியாழன், ஜூன் 26, 2014

ஷாருக்கானுக்கு பிரான்ஸ் அளிக்கும் உயரிய விருது

ஹிந்தித் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
திரைத்துறையில் கானின் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தினர், பொதுமக்கள் பிரிவிற்கு அளிக்கப்படும் உயரிய விருதான 'லெஜன் டி ஹானர்' விருதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் அடுத்த வாரம் மும்பைக்கு வந்து ஷாருக்கானுக்கு அளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்கு பிரான்சில் அளிக்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 2007-ம் ஆண்டில் நடிகர் அமிதாப்பச்சன் இந்த விருதைப் பெற்றுள்ளார். இவர் தவிர பாடகி லதா மங்கேஷ்கர் மற்றும் மறைந்த திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ள இந்தியர்கள் ஆவர்.

தனது மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 30-ம் தேதி இந்தியா வரும் பேபியஸ் தனது சக பிரிவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜையும் சந்திக்கின்றார். இந்தியாவில் தேசிய ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் இரு நாடுகளும் மேற்கொள்ளும் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும். 30 மற்றும் 1-ம் தேதி டெல்லி கூட்டங்களுக்குப் பின்னர் மும்பை செல்லும் பேபியஸ் அங்கு வர்த்தகம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதுடன் ஷாருக்கானுக்கு இந்த உயரிய விருதையும் வழங்க உள்ளார் என்று அரசு வட்டாரத் தகவல் ஒன்று குறிப்பிட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக